ஐபிஎல்-2020

அகர்வால் சதம்; முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள்: 223 ரன்கள் குவித்தது பஞ்சாப்!

27th Sep 2020 09:12 PM

ADVERTISEMENT


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

சிறிய மைதானம் என்ற சாதகத்தைப் பயன்படுத்தி இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினர். பவர் பிளே ஓவர்களுக்குப் பிறகு, ராகுல் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை அகர்வாலிடம் கொடுக்க, அவர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து மிரட்டினார்.

இதே மைதானத்தில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திய மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் சிக்ஸர்களாக விளாசினர். இதன்மூலம், 9-வது ஓவரிலேயே பஞ்சாப் அணி 100-ஐக் கடந்தது. சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து விளையாடிய அகர்வால் 80 ரன்களை எட்டிய நிலையில், ராகுல் 40 ரன்களைக் கூட கடக்கவில்லை.

ADVERTISEMENT

இதையடுத்து, ராகுலும் அதிரடிக்கு இணைய அவர் 35 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். இருவரும் சளைக்காது பவுண்டரிகளாக அடிக்க, அந்த அணி 14-வது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 150 ரன்களைக் கடந்தது. இதனால், ஸ்டீவ் ஸ்மித் செய்வதறியாது திகைத்தார்.

ஷ்ரேயாஸ் கோபால் வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த அகர்வால் 45 பந்துகளில் சதத்தை எட்டினார். 

ராஜஸ்தான் அணிக்கு ஒரே ஆறுதலாக, ஒப்பீட்டளவில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் அதிகம் பவுண்டரிகள் போகவில்லை. அகர்வாலும் சதம் அடித்த கையோடு டாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 106 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த ஓவரிலேயே ராகுலும் ராஜ்புத் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, கடைசி 2 ஓவர்களில் நிகோலஸ் பூரண் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காட்ட அந்த அணி 200 ரன்களைக் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், 223 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 13 ரன்களுடனும், பூரண் 8 பந்துகளில் 25 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணித் தரப்பில் கரண் மற்றும் ராஜ்புத் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT