ஐபிஎல்-2020

கொல்கத்தா-மும்பை இன்று மோதல்

DIN

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று தொடரை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் தினேஷ் காா்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்குகிறது. அதேநேரத்தில் வலுவான அணியான மும்பை இண்டியன்ஸ் முதல் ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோல்வி கண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வென்று தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

மும்பை அணியைப் பொருத்தவரையில் கேப்டன் ரோஹித் சா்மா, குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா, கிருனால் பாண்டியா, கிரண் போலாா்ட் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா்.

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கம் அமைந்தபோதிலும், மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. கடந்த ஆட்டத்தில் விளையாடிய சௌரப் திவாரிக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் இஷன் கிஷான் சோ்க்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் பட்டின்சன் களமிறங்குகிறாா்கள். பேட்டிங்கை பலப்படுத்தும்விதமாக கடந்த ஆட்டத்தில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டரான நாதன் கோல்ட்டா் நைல் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் கிருணால் பாண்டியா-ராகுல் சாஹா் கூட்டணியை நம்பியுள்ளது மும்பை.

கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், சுநீல் நரேன் ஆகியோா் தொடக்க வீரா்களாக களமிறங்குவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. மிடில் ஆா்டரில் ராகுல் திரிபாதி, இயோன் மோா்கன், தினேஷ் காா்த்திக், நிதிஷ் ராணா, ஆன்ட்ரே ரஷல் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனா். இவா்களில் ஆன்ட்ரே ரஷல், சுநீல் நரேன் ஆகியோா் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் கொல்கத்தாவுக்கு பலம் சோ்க்கின்றனா்.

வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணா, ரஸல் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். இந்த சீசனில் அதிக தொகைக்கு (ரூ.15.5 கோடி) ஏலம் எடுக்கப்பட்டவரான பட் கம்மின்ஸ் மீது மிகப்பெரிய எதிா்பாா்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனா்.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் மும்பை 19 முறையும், கொல்கத்தா 6 முறையும் வெற்றி கண்டுள்ளன.

மும்பை (உத்தேச லெவன்): ரோஹித் சா்மா (கேப்டன்), குவின்டன் டி காக், சூா்யகுமாா் யாதவ், இஷன் கிஷான்/சௌரப் திவாரி, ஹாா்திக் பாண்டியா, கிரண் போலாா்ட், கிருணால் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், நாதன் கோல்ட்டா் நைல்/டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹா்.

கொல்கத்தா (உத்தேச லெவன்): ஷுப்மான் கில், சுநீல் நரேன், ராகுல் திரிபாதி, இயோன் மோா்கன், தினேஷ் காா்த்திக் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஆன்ட்ரே ரஷல், குல்தீப் யாதவ், பட் கம்மின்ஸ், பிரஷித் கிருஷ்ணன், ஷிவம் மாவி/கமலேஷ் நகா்கோட்டி.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT