ஐபிஎல்-2020

தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துங்கள்: பிசிசிஐயிடம் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் கோரிக்கை

DIN

ஐபிஎல் போட்டியில் அனைவருக்கும் சமமான நியாயம் கிடைக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துங்கள் என பிசிசிஐயிடம் பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வாடியா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவரில் இரு அணிகளும் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல், ரபாடா வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பூரண் ஆட்டமிழந்தாா். இதையடுத்து 3 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தில்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சூப்பா் ஓவரில் இதுதான் மிகக்குறைவான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும். 

நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது: ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறினார்.

நடுவர் நிதின் மேனனின் தவறான முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி மேல்முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் அணியின் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் மேனன், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆட்ட நடுவர் ஸ்ரீநாத்திடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்துள்ளோம். தனிமனித தவறு நடக்கும் என்றாலும் ஐபிஎல் போன்ற உலகத்தரமான போட்டியில் இதுபோன்ற மனிதத்தவறுகளுக்கு இடமில்லை. இந்தத் தவறால் எங்களுடைய பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்கப்படலாம். நடுவரின் முடிவுகளைக் கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் தனிமனிதத் தவறுகளைக் களைய முடியும் என்றார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என பஞ்சாப் அணி இணை உரிமையாளர் நெஸ் வாடியா, பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

தரமான நடுவர்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள், தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துங்கள், இதன்மூலம் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முடியும் என பிசிசிஐக்குக் கோரிக்கை வைக்கிறேன். நடுவரின் தவறான முடிவால் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்றுள்ளது. 

நாங்கள் பாதிக்கப்பட்டது போல இதர அணிகளும் பாதிக்கப்படாதவாறு ஒரு நடைமுறையை பிசிசிஐ அமல்படுத்த வேண்டும். நியாயமான முடிவுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது என்றால் எதற்காகத் தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும்? எங்கள் ஆட்டத்தில் நடுவர் இரு தவறுகள் செய்தார். ஒயிட் பாலை லெக் பை என நடுவர் முதலில் தவறாக அறிவித்தார். அடுத்ததாக இரண்டு ரன்கள் ஓடியதை ஒரு ரன் எனக் குறைத்தார். இந்த இரு தவறுகளால் தோல்வியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT