ஐபிஎல்-2020

அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை: வெற்றிக்கு 163 ரன்கள் இலக்கு

19th Sep 2020 09:26 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

மும்பைக்கு அதிரடியான தொடக்கம் அமைந்தது.

ADVERTISEMENT

முதல் 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்ததையடுத்து, 5-வது ஓவரில் சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லை அறிமுகப்படுத்தினார் தோனி. இதற்குப் பலனாக 12 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 33 ரன்களுக்கு சாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, சூர்யகுமார் யாதவ் மற்றும் சௌரப் திவாரி பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த நிலையில், 11-வது ஓவரில் தீபக் சஹாரை மீண்டும் பந்துவீச அழைத்தார் தோனி. இந்த பந்துவீச்சு மாற்றமும் தோனிக்குப் பலனளித்தது. 17 ரன்கள் எடுத்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து, களமிறங்கிய ஹார்திக் பாண்டிய வந்த வேகத்தில் ஜடேஜா ஓவரில் 2 இமாலய சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். எனினும், அது நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

இதனிடையே, அதிரடிக்கு மாறத் தொடங்கிய திவாரி ஜடேஜா ஓவரில் டூ பிளெஸ்ஸியின் அபாரமான கேட்சில் ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

அதே ஓவரில் பாண்டியாவும் டூ பிளெஸ்ஸியின் மற்றுமொரு அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, போலார்ட் களமிறங்கி சாவ்லா பந்தில் சிக்ஸர் அடித்து விளையாடத் தொடங்கினார். அதேசமயம், நிகிடி வீசிய அடுத்த ஓவரில் க்ருணால் பாண்டியா தோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், மும்பை அணி சிக்கலில் இருந்தது.

இந்த சிக்கலிலிருந்து மீளுவதற்குள் போலார்ட் (18 ரன்கள்) மற்றும் பேட்டின்சனையும் (11 ரன்கள்) மும்பை அணி இழந்தது.

இதையடுத்து, சஹார் கடைசி ஓவரை சிறப்பாக வீசி போல்ட் விக்கெட்டை வீழ்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

இதன்மூலம், சென்னையின் வெற்றிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT