ஐபிஎல்-2020

பெங்களூரு தோல்வி: 4-ம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்!

31st Oct 2020 10:56 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு பேட்டிங்: 120 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ஆர்சிபி

ADVERTISEMENT

121 என்ற இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் ரித்திமான சாஹா களமிறங்கினர். வாஷிங்டன் சுந்தர் வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த வார்னர், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இதனால், பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.

ஆனால், பவர் பிளே முடிந்தவுடன் மணீஷ் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, சாஹா ரன்களை உயர்த்தி வந்தார். அவரும் 39 ரன்கள் எடுத்திருந்தபோது யுஸ்வேந்திர சஹாலிடம் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, கேன் வில்லியம்ஸனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டத்தில் லேசான விறுவிறுப்பு ஏற்பட்டது.

ஆனால், ஜேசன் ஹோல்டர் அதிரடியாக விளையாடினார். சஹால் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஹோல்டர் வெற்றியை உறுதி செய்தார்.

14.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹோல்டர் 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், பெங்களூரு அணிக்கு கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. 
 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT