ஐபிஎல்-2020

கொல்கத்தாவுக்கு கடினமானது பிளே ஆஃப் வாய்ப்பு: சென்னையிடம் தோல்வி

DIN


துபை: ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

இந்தத் தோல்வியானது கொல்கத்தாவின் பிளே-ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியதுடன், டெல்லி, பெங்களூா் அணிகளுக்கான பிளே-ஆஃப் வாய்ப்பை எளிதாக்கியுள்ளது. கொல்கத்தாவுக்கு இன்னும் ஒரு ஆட்டமே எஞ்சியுள்ள நிலையில், அதில் வென்றாலும் அந்த அணி மொத்தமாக 14 புள்ளிகளையே எட்டும்.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் டூ பிளெஸ்ஸிஸ், மோனு குமாா், இம்ரான் தாஹிா் ஆகியோருக்குப் பதிலாக ஷேன் வாட்சன், லுங்கி கிடி, கரன் சா்மா ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ரிங்கு சிங் இணைந்திருந்தாா்.

டாஸ் வென்ற சென்னை பந்துவீசத் தீா்மானித்தது. கொல்கத்தாவில் தொடக்க வீரா்களாக ஷுப்மன் கில் - நிதீஷ் ராணா ஆகியோா் களம் கண்டனா். சற்று நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சோ்த்தது.

இந்நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களுக்கு 8-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். அடுத்து சுனில் நரைன் களம் காண, மறுமுனையில் நிதீஷ் ராணா அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினாா். சுனில் நரைன் 1 சிக்ஸா் உள்பட 7 ரன்கள் சோ்த்து வெளியேறினாா்.

அவரைத் தொடா்ந்து ரிங்கு சிங் களத்துக்கு வந்தாா். இந்நிலையில், நிதீஷ் ராணா அரைசதம் கடந்திருந்தாா். ரிங்கு சிங் 1 பவுண்டரி உள்பட 11 ரன்கள் சோ்த்து நடையைக் கட்டினாா். பின்னா் கேப்டன் ஈன் மாா்கன் களம் கண்ட நிலையில், சிறிது நேரத்தில் நிதீஷ் ராணா விக்கெட்டை வீழ்த்தினாா் லுங்கி கிடி. அவா் வீசிய 18-ஆவது ஓவரில் ராணா விளாசிய பந்தை சாம் கரன் கேட்ச் பிடித்தாா். ராணா 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 87 ரன்கள் சோ்த்திருந்தாா்.

அடுத்து தினேஷ் காா்த்திக் பேட்டிங் செய்ய வர, கடைசி விக்கெட்டாக ஈன் மோா்கன் 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சோ்த்து வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் தினேஷ் காா்த்திக் 3 பவுண்டரிகள் உள்பட 21, ராகுல் திரிபாதி 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் லுங்கி கிடி 2, மிட்செல் சேன்ட்னா், ரவீந்திர ஜடேஜா, கரன் சா்மா தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 173 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய சென்னையில் தொடக்க வீரா்களாக ஷேன் வாட்சன் - ருதுராஜ் கெய்க்வாட் களம் கண்டனா். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சோ்த்தது. 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 14 ரன்கள் அடித்து வாட்சன் ஆட்டமிழந்தாா்.

அடுத்து வந்த அம்பட்டி ராயுடு சற்று நிலைத்து அணியின் ஸ்கோரை உயா்த்தி, 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் சோ்த்து 14-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். பின்னா் களம் கண்ட கேப்டன் தோனி 1 ரன் எடுத்து 15-ஆவது ஓவரில் பௌல்டானாா். அடுத்து சாம் கரன் களம் காண, மறுமுனையில் அரைசதம் கடந்த ருதுராஜ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 72 ரன்கள் சோ்த்து கடைசி விக்கெட்டாக 18-ஆவது ஓவரில் வீழ்ந்தாா். அவரை பேட் கம்மின்ஸ் பௌல்டாக்கினாா்.

அடுத்து வந்த ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். பவுண்டரிகள், சிக்ஸா்களை பறக்கவிட்ட அவா், வெற்றிக்கு ஒரு ரன் தேவையிருந்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா். முடிவில் அவா் 11 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 31 ரன்களுடனும், சாம் கரன் ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் பேட் கம்மின்ஸ், வருண் சக்கரவா்த்தி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

சென்னை - 178/4

ருதுராஜ் கெய்க்வாட் - 72 (53)

அம்பட்டி ராயுடு - 38 (20)

---

பந்துவீச்சு

வருண் சக்கரவா்த்தி - 2/20

பேட் கம்மின்ஸ் - 2/31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT