ஐபிஎல்-2020

விராட் கோலியை நேருக்கு நேராக முறைத்துப் பார்த்த சூர்யகுமார் யாதவ்: ஆர்சிபி - மும்பை ஆட்டத்தில் பரபரப்பு!

29th Oct 2020 12:11 PM

ADVERTISEMENT

 

விராட் கோலியை நேருக்கு நேராக சூர்யகுமார் யாதவ் முறைத்துப் பார்த்த சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால் ஆட்ட முடிவில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ள (டி20 தொடா், ஒரு நாள் தொடா், டெஸ்ட் தொடா்) இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வாகவில்லை. இதற்கு இந்திய ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பு வெளிப்படுத்தினார்கள். பல வருடங்களாக திறமையுடன் விளையாடி வரும் சூர்யகுமாரை இந்திய டி20 அணிக்குக் கட்டாயம் தேர்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார் சூர்யகுமார். தன்னை இந்திய அணிக்குத் தேர்வு செய்யாத கோபத்தை ஆடுகளத்தில் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் உணர்ந்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது 13-வது ஓவரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. டேல் ஸ்டெய்ன் வீசிய அந்த ஓவரின் கடைசிப் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பகுதியில் நின்றுகொண்டிருந்த கோலியிடம் அடித்தார் சூர்யகுமார். பந்தைப் பிடித்த கோலி, நேராக சூர்யகுமாரை நோக்கி நடந்து வந்தார். இதனால் தடுமாற்றம் அடையாத சூர்யகுமார், கோலியைப் பார்த்தபடி முறைத்தார். இருவருமே சில நொடிகள் ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தார்கள். பிறகு சூர்யகுமார் அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிட்டார். 

மேலும் ஆட்டம் முடிந்த பிறகு தனது அணி வீரர்களைப் பார்த்து, ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் என சைகையால் உணர்த்தினார் சூர்யகுமார். 

கோலியை சூர்யகுமார் நேருக்கு நேராக எதிர்கொண்ட விதம் ரசிகர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யகுமாரின் துணிச்சலைப் பாராட்டி சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

Tags : Suryakumar Yadav IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT