ஐபிஎல்-2020

சூர்யகுமார் அதிரடி; பிளே ஆஃப் சுற்றில் மும்பை

29th Oct 2020 03:09 AM

ADVERTISEMENT


அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை இண்டியன்ஸ் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது.
முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இண்டியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் கேப்டன் ரோஹித் சர்மா இடது கால் தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ச்சியாக 3-ஆவது ஆட்டத்தில் விளையாடவில்லை. அதேநேரத்தில் பெங்களூர் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நவ்தீப் சைனி, ஆரோன் ஃபிஞ்ச், மொயீன் அலி ஆகியோருக்குப் பதிலாக ஷிவம் துபே, ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெயின் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் கிரண் போலார்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்ûஸ தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் தொடங்கினர். டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய தேவ்தத் படிக்கல், கிருணால் பாண்டியா வீசிய 3-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஷ் பிலிப், டிரென்ட் போல்ட் வீசிய 5-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டினார்.  அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பட்டின்சன் வீசிய 6-ஆவது ஓவரில் தேவ்தத் படிக்கல் இரு பவுண்டரிகளை பறக்கவிட்டார். பெங்களூர் அணி 7.5 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஷ் பிலிப்பின் விக்கெட்டை இழந்தது. அவர் 24 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் சாஹர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
படிக்கல் அரை சதம்: இதையடுத்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில்தொடர்ந்து வேகமாக ஆடிய தேவ்தத் படிக்கல், கிருணால் பாண்டியா பந்துவீச்சில் பவுண்டரியை அடித்து 30 பந்துகளில் அரை சதம் கண்டார். 12-ஆவது ஓவரை வீசிய பும்ரா, விராட் கோலியை வீழ்த்தினார். அவர் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன் பிறகு களம் புகுந்த டிவில்லியர்ஸ், ஜேம்ஸ் பட்டின்சன் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். ராகுல் சாஹர் வீசிய 15-ஆவது ஓவரில் தேவ்தத் படிக்கல் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாசினார்.
16-ஆவது ஓவரை வீசிய கிரண் போலார்ட், டிவில்லியர்ûஸ வீழ்த்தினார். அவர் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஷிவம் துபே 2 ரன்களில் வெளியேற, தேவ்தத் படிக்கல் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கிறிஸ் மோரீஸ் 4 ரன்களில் வெளியேற, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. குருகீரத் சிங் 11 பந்துகளில் 14, வாஷிங்டன் சுந்தர் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மும்பை வெற்றி: பின்னர் ஆடிய மும்பை அணியில் குவின்டன் டி காக் 18 ரன்களிலும், இஷன் கிஷான் 25 ரன்களிலும் (19 பந்துகள்) வெளியேறினர். இதன்பிறகு செüரப் திவாரி 5, கிருணால் பாண்டியா 10 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ்  29 பந்துகளில் அரை சதம் கண்டார். இதனால் மும்பையின் வெற்றி எளிதானது. 
இதனிடையே ஹார்திக் பாண்டியா 17 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களும், கேப்டன் கிரண் போலார்ட் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ், யுவேந்திர சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.


பும்ரா 100 


பெங்களூர் கேப்டன் விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100  விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் தனது 89-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 

ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட் வீழ்த்திய 16-ஆவது வீரர் பும்ரா என்பது 
குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT