ஐபிஎல்-2020

ஐபிஎல்: மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று விட்டதா?

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் அணியாக 8 வெற்றிகள் பெற்று பிளேஆஃப் சுற்றுக்குக் கிட்டத்தட்ட தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால் ஆட்ட முடிவில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது மும்பை அணி. எனினும் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் தலா 14 ஆட்டங்களில் விளையாடும்போது குறைந்தது 9 வெற்றிகளைப் பெற்ற அணியே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும். 

ஆனால் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளைக் கொண்டுள்ள மும்பை அணி, +1.186 நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த ஒரு காரணத்தால் மும்பை அணி பிளேஆஃப்புக்குக் கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது என்று கூற முடிகிறது. தவிரவும் அந்த அணியால் முதல் இரு இடங்களையும் பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, ஐந்து அணிகள் மட்டுமே குறைந்தது 16 புள்ளிகளைப் பெற முடியும். அந்தத் தகுதியைக் கொண்டுள்ள கொல்கத்தா அணியின் நெட் ரன்ரேட் -0.479 என மிக மோசமாக உள்ளது.

கொல்கத்தா அணியை விடவும் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே மும்பையால் அந்த ஐந்து அணிகளில் கடைசி இடம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாமல் போக முடியும். அதற்கு இது நடக்கவேண்டும்.

அடுத்த இரு ஆட்டங்களிலும் மொத்தமாக 190 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கவேண்டும். 

கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் மொத்தமாக 200 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்.

இந்த இரண்டு சாத்தியக்கூறுகளும் நிஜமானால், மும்பையின் நெட் ரன்ரேட் 0.31 என இருக்கும். கொல்கத்தா 0.32 நெட் ரன்ரேட்டுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும். ஐந்தாவது அணியாக உள்ள மும்பை போட்டியிலிருந்து வெளியேறிவிடும். இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.

அடுத்து வரும் ஆட்டங்களின் முடிவுகள் இந்த விதத்தில் இருந்தால் என்ன ஆகும்?

KKR - CSK = கேகேஆர் வெற்றி
KXIP - RR = பஞ்சாப் வெற்றி
DC - MI = தில்லி வெற்றி
SRH - RCB = சன்ரைசர்ஸ் வெற்றி
KXIP - CSK = பஞ்சாப் வெற்றி
KKR - RR = கொல்கத்தா வெற்றி
RCB - DC = பெங்களூர் வெற்றி
SRH - MI = சன்ரைசர்ஸ் வெற்றி

மும்பை, ஆர்சிபி, கேகேஆர், பஞ்சாப், தில்லி ஆகிய ஐந்து அணிகளும் 16 புள்ளிகளுடன் இருக்கும். ஆனால் அப்போதும் மும்பையைக் காப்பாற்றப் போவது நெட் ரன்ரேட் தான். 

எனவே, மும்பை அணி கிட்டத்தட்ட பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்று விட்டது என்று கூறலாம்.

அதேசயம் முதல் இரண்டு இடங்களும் மும்பை அணிக்குக் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

முதல் இரு இடங்களுக்காக மும்பையுடன் ஆர்சிபி, தில்லி ஆகிய அணிகள் தான் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இவைதான் தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளன. ஆனால் மும்பை - தில்லி அணிகள் ஓர் ஆட்டத்தில் மோதவிருப்பதால் இந்த இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்றுதான் 18 புள்ளிகளைப் பெறும். இதனால் பிளேஆஃப்புக்குக் கிட்டத்தட்ட தகுதி பெற்றது மட்டுமில்லாமல் முதல் இரண்டு இடங்களில் ஒன்றும் மும்பைக்கு சாத்தியமாகும் சூழலே தற்போது நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT