ஐபிஎல்-2020

வாழ்வா, சாவா ஆட்டத்தில் சென்னையுடன் இன்று மோதுகிறது கொல்கத்தா

DIN

துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
துபையில் நடைபெறும் இந்த ஆட்டம் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமானதாகும். 
இந்த சீசனில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது.
எனவே, அந்த அணி இந்த ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. 
மொத்தத்தில் இந்த ஆட்டம் கொல்கத்தா அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். 
அதேநேரத்தில் சென்னை அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியுமின்றி களமிறங்குகிறது. 
கடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி கண்ட சென்னை அணி, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியைப் பொருத்தவரையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன் குவிக்காதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், கேப்டன் இயோன் மோர்கன் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், ஷுப்மான் கில், நிதீஷ் ராணா தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 
எனவே சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் முன்வரிசை பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பொருத்தே கொல்கத்தாவின் ரன் குவிப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், பிரஷித் கிருஷ்ணா கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், வருண் சக்ரவர்த்தி கூட்டணியையும் நம்பியுள்ளது கொல்கத்தா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட்,  டூபிளெஸ்ஸிஸ், அம்பட்டி ராயுடு, கேப்டன் தோனி ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் பேட்டிங், பெüலிங் என இரண்டிலும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கின்றனர். 
வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், மோனுகுமார், சாம் கரன் ஆகியோரையும், சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் நம்பியுள்ளது சென்னை.

சென்னை (உத்தேச லெவன்) 

ருதுராஜ் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ், அம்பட்டி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், மிட்செல் சேன்ட்னர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனுகுமார்.

கொல்கத்தா  (உத்தேச லெவன்) 

ஷுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயோன் மோர்கன் (கேப்டன்), சுநீல் நரேன், கமலேஸ் நகர்கோட்டி, பட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, பிரஷித் கிருஷ்ணா.

போட்டி நேரம்  :  இரவு மணி 7.30
நேரடி ஒளிபரப்பு  :  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இதுவரை... 

இவ்விரு அணிகளும் இதுவரை 21ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 
அதில் சென்னை 13 ஆட்டங்களிலும், கொல்கத்தா 8 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT