ஐபிஎல்-2020

பெங்களூருவைக் கட்டுப்படுத்திய பூம்ரா: மும்பைக்கு 165 ரன்கள் இலக்கு

28th Oct 2020 09:17 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஷ் பிலிப்பி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இந்த இணை பெங்களூருவுக்கு அதிரடி தொடக்கம் தந்தது. இதனால் பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் ராகுல் சஹார் வீசிய 8-வது ஓவரில் பிலிப்பி (33 ரன்கள்) முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பிலிப்பி, படிக்கல் இணை முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

ADVERTISEMENT

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி சோபிக்கத் தவறி 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களுக்கு ஜாஸ்பிரீத் பூம்ராவிடம் வீழ்ந்தார். விக்கெட்டுகள் விழுந்தபோதும் படிக்கல் அரைசதம் அடித்து அதிரடி காட்டி வந்தார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 8-இல் இருந்து வந்தது.

டி வில்லியர்ஸும் அதிரடி காட்ட ரன் ரேட் உயரத் தொடங்கியது. இந்த நிலையில், 16-வது ஓவரை பொலார்ட் வீசினார். அதற்குப் பலனாக டி வில்லியர்ஸ் (15 ரன்கள்) ஆட்டமிழந்தார். 17-வது ஓவரை வீசிய பூம்ரா முதலில் துபே (2 ரன்கள்) விக்கெட்டையும், பிறகு படிக்கல் (74 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். போல்ட் வீசிய அடுத்த ஓவரில் மோரிஸும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், ரன் ரேட் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

கடைசி ஓவரில் மட்டும் குர்கீரத் மான் சிங் 2 பவுண்டரிகள் அடிக்க 13 ரன்கள் கிடைத்தன.

இதன்மூலம், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. 

மும்பை தரப்பில் பூம்ரா 3 விக்கெட்டுகளையும், சஹார், பொலார்ட், போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT