ஐபிஎல்-2020

வார்னர், சாஹா சரவெடி: ஹைதராபாத் 219 ரன்கள் குவிப்பு

27th Oct 2020 09:13 PM

ADVERTISEMENT


வார்னர், சாஹா அதிரடியால் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ரித்திமான் சாஹா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து மிரட்டத் தொடங்கினார் சாஹா. ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 3-வது ஓவரில் சிக்ஸர் அடித்து வார்னரும் அதிரடியில் இணைந்தார். அதன்பிறகு, ரபாடா, நோர்க்கியா என எந்தப் பந்துவீச்சாளரையும் விட்டுவைக்காமல் வார்னர் மற்றும் சாஹா பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டினர்.

இதனால், வார்னர் பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் 25-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். தில்லியும் பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எட்டியது. தில்லியின் பிரதான பந்துவீச்சாளரான ரபாடா முதல் 2 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கினார்.

ADVERTISEMENT

ரன் ரேட் ஓவருக்கு 12-இல் 11-க்கு சரியத் தொடங்கிய நிலையில் வார்னர் 66 ரன்களுக்கு அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 107 ரன்கள் சேர்த்தன.

எனினும், சாஹா அதிரடி பொறுப்பை ஏற்று மிரட்டத் தொடங்கினார். 27-வது பந்தில் அரைசதத்தை எட்டிய சாஹா, அரைசதத்துக்குப் பிறகு அதிரடி காட்டி ரன் ரேட்டை மீண்டும் 12-க்கு உயர்த்தினார். மணீஷ் பாண்டே ஸ்டிரைக்கை சாஹாவிடம் கொடுத்து ஒத்துழைப்பு தந்தார்.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாஹா 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, மணீஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் பவுண்டரிகள் அடித்து விளையாடினார். தில்லி பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக வீச ஹைதராபாத் அணி கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் 31 பந்துகளில் 44 ரன்களும், கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தார்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT