ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டியில் முதல்முறை: கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த பாண்டியா!

26th Oct 2020 01:10 PM

ADVERTISEMENT

 

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மும்பை இன்னிங்ஸில் பாண்டியா 21 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தின்போது, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் பாண்டியா.   

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்டை காவலர்கள் கைது செய்தனா். அப்போது, ஃபிளாய்டின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். 

ADVERTISEMENT

ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்ததைக் கண்டித்தும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகத்தை முன்வைத்தும் அமெரிக்கா முழுவதும் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிறவெறி எதிா்ப்பு ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின்போது இரு அணி கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர்களும் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். வீரர்கள் ஆடுகளத்திலும் பயிற்சியாளர்களும் இதர ஊழியர்களும் எல்லைக் கோட்டுக்கு அருகேயும் தங்கள் செயல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இரு அணி வீரர்களும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்கள். வீரர்களின் இந்தச் செயல்பாடு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. 

ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான ஹோல்டிங் பேசினார். கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். இதற்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. நாம் அனைவருமே மனிதர்கள். கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கம் என்பது வெள்ளையர்களைக் கருப்பர்கள் முந்திச் செல்வதற்காகத் தொடங்கப்பட்டது அல்ல. அதன் நோக்கமே சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் என்றார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்கு முதல்முறையாக ஆதரவு கிடைத்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஒரு சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தினார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா. இதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

Tags : IPL black lives matter Pandya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT