ஐபிஎல்-2020

'ஸ்பார்க்'-ஐ வெளிப்படுத்திய ருதுராஜ்: சென்னை அசத்தல் வெற்றி

25th Oct 2020 06:45 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு பேட்டிங்: பெங்களூருவை 145 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது சென்னை

146 ரன்கள் என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். மாரிஸ் வீசிய 2-வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டு பிளெஸ்ஸி பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்க ஆட்டத்தில் அதிரடி தொடங்கியது.

ADVERTISEMENT

வாஷிங்டன் சுந்தர் வீசிய 3-வது ஓவரில் ருதுராஜ் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

இருவரும் பவுண்டரிகளாக அடிக்க 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், டு பிளெஸ்ஸி 13 பந்துகளில் 25 ரன்களுக்கு மாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாடில் இருந்ததால், ருதுராஜ் மற்றும் அம்பதி ராயுடு நெருக்கடி இல்லாமல் விளையாடினர்.

ஒரு கட்டத்துக்கு மேல் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடிக்க பெங்களூரு பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.

சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 27 பந்துகளில் 39 ரன்களுக்கு சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ருதுராஜுடன் கேப்டன் தோனி இணைந்தார். அதேஓவரில் ருதுராஜும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை எட்டினார்.

இதன்பிறகு, தோனி துரிதமாக விளையாட சென்னையின் வெற்றி வாய்ப்பு உறுதியானது. மாரிஸ் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்த ருதுராஜ் வெற்றியை உறுதி செய்தார்.

18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்களும், தோனி 21 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT