ஐபிஎல்-2020

சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற வேண்டுமா?: இதர அணிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்!

எழில்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.

இதனால் சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியுமா என ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

அதற்குள் கவலைப்படவேண்டியதில்லை ரசிகர்களே!

சிஎஸ்கே அணி இன்னும் போட்டியிலிருந்து வெளியேறவில்லை. மற்ற அணிகள் போல பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் சிஎஸ்கேவும் உள்ளது. இதற்கு மற்ற அணிகளும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். 

எப்படி என்று பார்க்கலாம்.

முதல் மூன்று இடங்கள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. இதனால் அதில் கை வைக்கவேண்டாம். முதல் மூன்று இடங்களை தில்லி, ஆர்சிபி, மும்பை அணிகளுக்கு விட்டுவிடலாம். நான்காவது இடத்துக்குத்தான் சிஎஸ்கே போட்டியிடுகிறது,

சரி, போட்டியை ஆரம்பிக்கலாமா?

பிளேஆஃப்புக்குச் செல்ல ஆசைப்படும் சிஎஸ்கே அணி, முதலில் மீதமுள்ள நான்கு ஆட்டங்களையும் வெல்லவேண்டும். கைவசம் 14 புள்ளிகள் இருக்கும். அது மட்டும் சாத்தியமானால் வானம் வசப்படும். 

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

முதல் மூன்று இடங்களில் உள்ள தில்லி, ஆர்சிபி, மும்பை அணிகள் வழக்கம்போல எல்லா ஆட்டங்களிலும் வெல்லவேண்டும். இந்த அணிகளுக்கிடையே நடக்கும் ஆட்டங்களின் முடிவுகளால் சிஎஸ்கேவுக்குப் பாதிப்பில்லை.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இப்போது இரு தடைகளை சிஎஸ்கே தாண்டிவிட்டது. மூன்றாவது தடை - இதர அணிகள்.

அந்த அணிகள் என்ன செய்தால் சிஎஸ்கேவின் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்காது? பார்க்கலாம்.

இப்போது 4-ம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணி சிஎஸ்கேவுக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அந்த அணி கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது. நல்லது. அடுத்த நான்கு ஆட்டங்களிலும் இதேபோல மூன்றில் தோல்வியடைந்து ஒன்றில் மட்டும் கொல்கத்தா அணி வெல்லவேண்டும். இதன்மூலம் கொல்கத்தா அணியால் 12 புள்ளிகள் மட்டுமே எடுக்கமுடியும். மீதமுள்ள நான்கு ஆட்டங்களிலும் வென்று 14 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும்.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கேவுக்கு மேலே உள்ள அணிகளாக ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளன. மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகளைக் கொண்டுள்ளன. இவர்களில் ஒருவர் கூட 14 புள்ளிகள் பக்கம் வந்துவிடக் கூடாது. அதனால் மூன்று அணிகளும் மீதமுள்ள 4 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளை மட்டுமே பெறவேண்டும். அப்போது என்ன ஆகும்? ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் வசம் 12 புள்ளிகள் தான் இருக்கும்.

அப்படியே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

14 புள்ளிகளுடன் நான்காவது அணியாக சிஎஸ்கே பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். 

நம்பிக்கையுடன் காத்திருப்போம் ரசிகர்களே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT