ஐபிஎல்-2020

மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் அபாரம்: ஹைதராபாத் வெற்றி

DIN


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மணீஷ் பாண்டே, விஜய் சங்கர் பாட்னர்ஷிப்பால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரில் பேர்ஸ்டோவ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், மணீஷ் பாண்டேவுடன் விஜய் சங்கர் இணைந்தார். மணீஷ் அதிரடி காட்டி மிரட்ட, விஜய் சங்கர் மறுமுனையில் நிதானம் காட்டி விக்கெட்டைப் பாதுகாத்து ஒத்துழைப்பு தந்தார். 

இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 8-க்கு கீழ் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பாட்னர்ஷிப் நீடித்துக் கொண்டே இருந்ததால், ராஜஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.

மணீஷ் பாண்டே 28 பந்துகளில் அரைசதம் அடித்தும், அதிரடி காட்டி வந்தார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் விழாததால், மீண்டும் ஆர்ச்சரையே பந்துவீச அழைத்தார். அவர் ஓவரிலும் விக்கெட் விழவில்லை.

இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 7-க்கும் கீழ் குறைந்தது.

இதையடுத்து, வேறு வழியின்றி விக்கெட் வேண்டும் என்பதால் 16-வது ஓவரிலேயே ஆர்ச்சரின் கடைசி ஓவரை வீச அழைத்தார் ஸ்டீவ் ஸ்மித். இதற்கும் பலனில்லாமல், விஜய் சங்கர் முதல் 3 பந்துகளில் பவுண்டரிகள் அடித்து மிரட்டினார்.

கார்த்திக் தியாகி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஓவரில் மணீஷ் தலா 1 சிக்ஸர் அடிக்க ஹைதராபாத் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இதையடுத்து, தியாகி வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். அதேசமயம் அவரது அரைசதத்தையும் எட்டினார். இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது.

18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மணீஷ் 47 பந்துகளில் 83 ரன்களும், விஜய் சங்கர் 51 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT