ஐபிஎல்-2020

ராஜஸ்தானுக்கு 4-ஆவது வெற்றி

DIN

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ûஸ வீழ்த்தியது.  ராஜஸ்தானுக்கு இது 4-ஆவது வெற்றி. 

இந்த வெற்றி ராஜஸ்தானுக்கு பிளே-ஆஃப் நம்பிக்கையை அளித்துள்ள நிலையில், தோல்வியடைந்த சென்னை போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளது. 

அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வென்றது. 70 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் ராஜஸ்தானை வெற்றிக்கு வழிநடத்திய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் ஆனார். 

இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சென்னையில் காயமடைந்த டுவைன் பிராவோவுக்குப் பதிலாக ஜோஷ் ஹேஸில்வுட்டும், கரன் சர்மாவுக்குப் பதிலாக பியூஷ் சாவ்லாவும் சேர்க்கப்பட்டிருந்தனர். ராஜஸ்தானில் ஜெயதேவ் உனத்கட்டுக்குப் பதிலாக அங்கித் ராஜ்புத் சேர்க்கப்பட்டிருந்தார். 
டாஸ் வென்ற சென்னை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக சாம் கரன் - டு பிளெஸ்ஸிஸ் களமிறங்கினர். வழக்கமாக அதிரடி காட்டும் சாம் கரன், இந்த ஆட்டத்தில் சற்று நிதானமாக ஆடினார். முதல் விக்கெட்டாக டூ பிளெஸ்ஸில் 1 பவுண்டரி உள்பட 10 ரன்களுக்கு வெளியேறினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய 3-ஆவது ஓவரில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர். 

பின்னர் வந்த ஷேன் வாட்சன் ஒரு ஓவர் மட்டுமே நிலைத்து 2 பவுண்டரிகள் மட்டும் விளாசிவிட்டு பெவிலியன் திரும்பினார். கார்த்திக் தியாகி வீசிய 4-ஆவது ஓவரில் அவரடித்த பந்து ராகுல் தெவதியா கைகளில் தஞ்சமானது. அவரைத் தொடர்ந்து அம்பட்டி ராயுடு களம் கண்டார். 

இந்நிலையில், சாம் கரன் ஆட்டமிழந்தார். 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 22 ரன்கள் சேர்த்திருந்த அவர், ஷ்ரேயஸ் கோபால் வீசிய 9-ஆவது ஓவரில் ஜோஸ் பட்லருக்கு கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 
இதையடுத்து கேப்டன் தோனி களத்துக்கு வந்தார். 

மறுமுனையில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்திருந்த அம்பட்டி ராயுடு, 10-ஆவது ஓவரில் ராகுல் தெவதியா வீசிய பந்தை விளாச முயல, அது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளில் சிக்கியது. பின்னர் கேதார் ஜாதவ் ஆட வந்தார். 

கடைசி விக்கெட்டாக தோனி 2 பவுண்டரிகள் உள்பட 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 18-ஆவது ஓவரில் அவர் ரன் அவுட்டாக்கப்பட்டார். அவரை அடுத்து ரவீந்திர ஜடேஜா ஆட வந்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது சென்னை. ஜடேஜா 4 பவுண்டரிகள் உள்பட 35, கேதார் ஜாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி, ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். 

பின்னர் ஆடிய ராஜஸ்தானில் பென் ஸ்டோக்ஸ் - ராபின் உத்தப்பா தொடக்க வீரர்களாக வந்தனர். ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 19 ரன்கள் எடுத்த நிலையில், தீபக் சாஹர் வீசிய 3-ஆவது ஓவரில் பெளல்டாகினார்.
 உடன் வந்த ராபின் உத்தப்பா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஹேஸில்வுட் வீசிய 4-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டோக்ûஸ அடுத்துவந்த சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகினார். தீபக் சாஹர் வீசிய 5-ஆவது ஓவரில் அவரடித்த பந்து தோனியிடம் தஞ்சமானது. 

எனினும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - ஜோஸ் பட்லர் கூட்டணி ராஜஸ்தானை வெற்றிக்கு வழிநடத்தியது. ஸ்டோக்ஸ் அதிரடியாக அரைசதம் கடந்தார். இவ்வாறாக 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது ராஜஸ்தான். ஸ்டோக்ஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 70, ஸ்மித் 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சாஹர் 2, ஜோஷ் ஹேஸில்வுட் 1 விக்கெட் சாய்த்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT