ஐபிஎல்-2020

டெல்லியுடன் இன்று பஞ்சாப் பலப்பரீட்சை

DIN


துபை: ஐபிஎல் போட்டியில் தற்போது அருமையான ஃபார்மில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, நிலையான ஃபார்ம் இன்றி தவித்து வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் செவ்வாய்க்கிழமை அபுதாபியில் எதிர்கொள்கிறது. 

இதுவரை ஆடிய 9 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் தனது பிளே-ஆஃப் நம்பிக்கையை தக்க வைக்க அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

டெல்லிக்கு எதிரான ஆட்டம் பஞ்சாபுக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. எனினும், கடைசி இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றியினால் எழுந்த நம்பிக்கையுடன் டெல்லியை பஞ்சாப் எதிர்கொள்ளும். 

பஞ்சாபை பொருத்தவரை, "டெத் பெளலிங்'-ஐ எதிர்கொள்வதும், மிடில் ஆர்டர் வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஃபார்மில் இல்லாமல் இருப்பதுமே முக்கிய பிரச்னைகளாக உள்ளது. ஐபிஎல் போட்டியிலேயே மிக அதிக ரன்கள் வைத்துள்ள முதல் இரு வீரர்கள் பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் (525), மயங்க் அகர்வால் (393) தான். இருந்தும் சேஸிங்கில் அந்த அணி பிரச்னைகளை சந்தித்து வருகிறது. 

அவர்கள் இருவரின் சுமையை குறைக்கும் வகையில் தற்போது கிறிஸ் கெயில் அணியில் இணைந்திருப்பது பலம். நிகோலஸ் பூரனும் அவ்வப்போது பங்களிப்பு செய்கிறார். பந்துவீச்சில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர். 

டெல்லியை பொருத்தவரை, தொடர் வெற்றிகள் பெற்று நம்பிக்கையுடன் களத்தில் இருக்கிறது. தவன் தனது ஃபார்முக்கு முழுமையாகத் திரும்பிவிட்ட நிலையில், தொடக்க வீரர் பிருத்வி ஷா கடந்த 2 ஆட்டங்களில் டக் அவுட்டாகி தடுமாறி வருகிறார். 

அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினால் அணிக்கு கூடுதல் பலம். காயம் கண்டு வெளியேறியுள்ள ரிஷப் பண்ட் இல்லாத இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் அஜிங்க்ய ரஹானேவுக்கு எழுந்துள்ளது. பெளலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் அக்ஸர் படேல். டெல்லியின் பெளலிங் வரிசையும் ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே உள்ளிட்டோருடன் வலுவானதாகவே உள்ளது. 


பஞ்சாப் (உத்தேச அணி)
லோகேஷ் ராகுல் (கேப்டன்), 
மன்தீப் சிங், ஜேம்ஸ் நீஷம், தஜிந்தர் சிங், கிறிஸ் ஜோர்டான், கருண் நாயர்,
 தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், 
அர்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல், முஜீப் உர் ரஹ்மான், சர்ஃப்ராஸ் கான், மயங்க் அகர்வால், முகமது ஷமி, 
தர்ஷன் நல்கண்டே, நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில், முருகன் அஸ்வின், 
கிருஷ்ணப்பா கெளதம்,
ஹார்டஸ் வில்ஜோயின், சிம்ரன்சிங். 

டெல்லி (உத்தேச அணி)
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), 
ககிசோ ரபாடா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், 
சந்தீப் லேமிஷேன், அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவன், ஷிம்ரோன் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, மோஹித் சர்மா, பிருத்வி ஷா, 
லலித் யாதவ், அவேஷ் கான், 
அக்ஸர் படேல், துஷார் தேஷ்பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்ஷல் படேல், 
கீமோ பால், அன்ரிச் நார்ட்ஜே, 
டேனியல் சாம்ஸ். 

நேருக்கு நேர்: ஐபிஎல் போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் இதுவரை 25 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 14 ஆட்டங்களிலும், டெல்லி 11 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT