ஐபிஎல்-2020

தவான் மீண்டும் சதம்: தில்லி 164 ரன்கள் குவிப்பு

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். கடந்த சில ஆட்டங்களாக சொதப்பி வரும் பிரித்வி ஷா இந்த ஆட்டத்திலும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடந்த சில ஆட்டங்களாக பேட்டிங்கில் மிரட்டி வரும் தவான் இந்த ஆட்டத்திலும் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து முதல் ஓவரிலேயே மிரட்டத் தொடங்கினார்.

கேப்டன் ஷ்ரேயஸ் வழக்கம்போல் ஒத்துழைக்க பவுண்டரிகள் அடிப்பதை தவான் கவனித்துக் கொண்டார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 8-க்கு மேல் இருந்தது.

இந்த நிலையில் முருகன் அஸ்வின் சுழலில் ஷ்ரேயஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதே ஓவரில் தவானும் அரைசதத்தைக் கடந்தார்.

காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் விளையாடாத ரிஷப் பந்த் களமிறங்கினார். அவர் துரிதமாக ரன் சேர்க்க திணறி வந்தார். எனினும், மறுமுனையில் தவான் இருந்ததால் தில்லிக்கு அவ்வப்போது பவுண்டரிகள் கிடைத்தன.

2 இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் கிளென் மேக்ஸ்வெல்லைப் பயன்படுத்தினார் ராகுல். அதற்குப் பலனாக பந்த் 14 ரன்களுக்கு (20 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸும் நேரம் எடுத்துக்கொள்ள தவான் ரன்களைக் குவித்து வந்தார். அவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 9 ரன்களுக்கு ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். 

எனினும், கடைசி கட்ட அதிரடி பொறுப்பை ஏற்ற தவான் பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். இதன்மூலம், 19-வது ஓவரில் அவர் சதமும் அடித்தார். 56-வது பந்தில் அவர் சதத்தை எட்டினார்.

ஷமி வீசிய கடைசி ஓவரில் 7 ரன்கள் கிடைக்க, ஹெத்மயர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.  

பஞ்சாப் தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், நீஷம், அஸ்வின், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT