ஐபிஎல்-2020

யார்க்கர் வீசுவதில் தெளிவாக இருந்தார் ஷமி: கே.எல். ராகுல்

20th Oct 2020 05:43 AM

ADVERTISEMENT


துபை: மும்பை இண்டியன்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரின்போது யார்க்கர் வீசுவதில் தங்களது பெளலர் முகமது ஷமி தெளிவாக இருந்தார் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டினார். 

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் மீண்டும் சமன் ஆக, 2-ஆவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. 

இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறியதாவது: 
எந்தவொரு அணியும் சூப்பர் ஓவருக்கு முன்னதாகவே தயாராக இயலாது. அதுபோன்ற நேரத்தில் பெளலர்களின் துணிச்சலின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அதன்மூலம் அவர்களது உள்ளுணர்வு மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டும். 

மும்பைக்கு எதிரான சூப்பர் ஓவரின்போது 6 பந்துகளையுமே யார்க்கராக வீசுவதில் முகமது ஷமி தெளிவாக இருந்தார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் மேம்பட்டு வருகிறார். மூத்த வீரர்கள் அணியின் வெற்றிக்கு இதுபோன்று பங்களிப்பு செய்வது சிறப்பானதாகும். 

ADVERTISEMENT

மும்பைக்கு எதிரான வெற்றி மகிழ்ச்சியளித்தாலும், இதுபோன்று இறுதிவரை சென்று நெருக்கடியுடன் ஆடி வெற்றி பெற விரும்பவில்லை. இவ்வாறு வெற்றி பெறுவது இது முதல்முறையல்ல. அடுத்து வரும் ஆட்டங்களில் அதைச் சரி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று லோகேஷ் ராகுல் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT