ஐபிஎல்-2020

சமனில் முடிந்த முதல் ஆட்டம்: சூப்பர் ஓவரில் முடிவு

18th Oct 2020 07:36 PM

ADVERTISEMENT


கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் மூலம் முடிவு தீர்மானிக்கப்படவுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா பேட்டிங்: கார்த்திக், மார்கன் அதிரடி பினிஷிங்: ஹைதராபாத்துக்கு 164 ரன்கள் இலக்கு

ADVERTISEMENT

ஹைதராபாத் பேட்டிங் வரிசையில் இந்த முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க ஆட்டக்காரராக ஜானி பேர்ஸ்டோவுடன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். டேவிட் வார்னர் நடுவரிசை பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார்.

புதிய தொடக்க ஆட்டக்காரர்கள் என்றாலும் இருவரும் அதிரடியான தொடக்கத்தையே தந்தனர். இருவருமே அதிரடி காட்டியதால் பவர் பிளே முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது.

பவர் பிளே முடிந்தவுடன் இந்த ஆட்டத்தில் முதல்முறையாகக் களமிறங்கிய லாக்கி பெர்குசனைப் பந்துவீச அழைத்தார் மார்கன். அவர் முதல் பந்திலேயே வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். வில்லியம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ச்சியாக 3-வது வீரராகக் களமிறங்கி வந்த மணீஷ் பாண்டே, இந்த முறை களமிறங்கவில்லை. அவருக்குப் பதில் பிரியம் கர்க் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். அவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது வீரராக கேப்டன் வார்னர் களமிறங்கினார். 

இதுவரை பொறுப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவும் அடுத்த ஓவரிலேயே 36 ரன்களுக்கு வருண் சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 5-வது வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கினார். இவரையும் சிறப்பான யார்க்கர் பந்து மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் பெர்குசன். விஜய் சங்கரும் சோபிக்காமல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால், அந்த அணி 109 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது ஹைதராபாத் வெற்றிக்கு 29 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்டன.

இதையடுத்து, வார்னருடன் இணைந்த அப்துல் சமத் அதிரடி காட்டி விளையாடினார். எனினும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால் ஓவருக்கு 1 பவுண்டரிக்கு மேல் கிடைக்காமல் பெரிய ஓவராக மாறவில்லை. இதனால், கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டன. 

மவி வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரிகள் கிடைத்தாலும் சமத் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. ரஸல் வீசினார். முதல் பந்தை ரஷித் கான் எதிர்கொண்டார். அந்த பந்து நோ-பாலாக வீசப்பட 1 ரன் கிடைத்தது. அடுத்த பந்தில் ரஷித் கான் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனாலும்,  ப்ரீ ஹிட் என்பதால் 1 ரன் கிடைத்தது. கடைசி 5 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்த 3 பந்துகளில் வார்னர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன. 5-வது பந்தில் 2 ரன்களும், கடைசி பந்தில் 1 ரன்னும் எடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது.

இதன்மூலம், சூப்பர் ஓவர் மூலம் ஆட்டத்தின் முடிவு தீர்மானிக்கப்படவுள்ளது.   

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT