ஐபிஎல்-2020

ஆரோன் ஃபிஞ்ச் - மன்கட் சர்ச்சை பற்றி ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்?: அஸ்வின் பதில்

7th Oct 2020 05:38 PM

ADVERTISEMENT

 

ஆரோன் ஃபிஞ்ச் - மன்கட் சர்ச்சை பற்றி தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கருத்து குறித்து அஸ்வின் பதில் அளித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வென்றது.

பெங்களூா் இன்னிங்ஸின்போது 3-ஆவது ஓவரை தில்லி வீரா் அஸ்வின் வீசினாா். அப்போது மறுமுனையில் இருந்த ஆரோன் ஃபிஞ்ச், பந்து அஸ்வின் கைகளில் இருந்து விடுபடும் முன்பாகவே கிரீஸை விட்டுத் தாண்டினாா். அப்போது அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ஃபிஞ்சை ஆட்டமிழக்கச் செய்வதுபோல் எச்சரித்துவிட்டு சிரித்தாா். பிறகு கிரிஸூக்குள் நிற்கும்படி ஃபிஞ்சை நடுவர் அறிவுறுத்தினார். இதைக் கண்ட தில்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். காரணம், இந்த வருட ஐபிஎல் போட்டியில் மன்கட் முறையில் எவரையும் ஆட்டமிழக்கச் செய்யக்கூடாது என்று அஸ்வினிடம் தாம் கூறியுள்ளதாக போட்டி தொடங்கும் முன் பாண்டிங் கூறியிருந்தாா். கடந்த வருட ஐபிஎல் போட்டியின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை மன்கட் முறைப்படி பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அவுட் செய்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆரோன் ஃபிஞ்சை மன்கட் முறையில் ரன் அவுட் செய்யாதது குறித்து ட்விட்டரில் அஸ்வின் கூறியதாவது: தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இதுதான் இந்த வருடத்துக்கான முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். பிறகு என்னைக் குறை சொல்லவேண்டாம். மேலும், நானும் ஃபிஞ்சும் நல்ல நண்பர்கள் என்று கூறி இந்த ட்வீட்டை ரிக்கி பாண்டிங்குக்கும் டேக் செய்திருந்தார். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தன்னுடைய யூடியூபில் அஸ்வின் கூடுதல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

அந்த ஆட்டத்தில் மைதானம் ஒரு பக்கம் பெரிதாக இருந்தது. இதனால் இன்று யாராவது ஒருவர் கிரீஸை விட்டு வெளியே செல்வார் என எனக்குத் தெரிந்தது. ஏனெனில் அந்த மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கத் தைரியம் கொஞ்சம் ஜாஸ்தி தேவை. அந்த அணியில் வேகமாக ஓடி ரன்கள் எடுக்கவும் ஆள்கள் இருக்கிறார்கள். இன்று யாராவது வெளியே செல்வார், நமக்கு போனி இருக்கிறது என்று எண்ணியபடி ஆட்டத்துக்குச் சென்றேன்.

நான் பந்துவீச முயன்றபோது கோல்ட் வண்ண ஹெல்மெட் (ஆரோன் ஃபிஞ்ச்) முன்னால் சென்றுகொண்டிருந்தது. இதனால் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு ரன் அவுட் செய்யலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்தேன். யோசிக்கும்போது கூட அவர் கிரீஸின் உள்ளே செல்லவில்லை. என்னையே குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே இருந்தார். 

ஆரோன் ஃபிஞ்ச் நமக்கு தோஸ்து வேறு. பஞ்சாப் அணியில் இருந்தபோது இருவரும் அதிக நேரம் செலவழித்து உரையாடியுள்ளோம். நான்கு முறைக் கூட்டிக் கழித்துப் பார்த்தேன். கணக்கு சரியாக வரவில்லை. இதையே கடைசி எச்சரிக்கையாக அறிவித்துவிடலாம் என நினைத்தேன். 

ரமணா படத்தில் சொல்வது போல தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பேட்ஸ்மேன் மறுமுனையில் கிரீஸை விட்டு வெளியே சென்றால் 10 ரன்களைக் கழிக்கவேண்டும். இதற்குப் பிறகு யாரும் வெளியே போக மாட்டார்கள். இந்த முறையில் பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்வதில் எங்களுக்கும் பெரிய திறமை தேவையில்லை. திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. நான் எத்தனை முறை போலீஸ் வேலை பார்த்தாலும் திருடனாகப் பார்த்து திருந்தினால் தான் உண்டு. 

என்னுடைய ட்வீட்டில் பாண்டிங்கையும் சேர்த்து ட்வீட் செய்தேன். அன்றிரவு அணியின் கூட்டத்தின்போது நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்போது பாண்டிங் சொன்னார், என்ன ஃபிஞ்ச் அவ்வளவு தூரம் வெளியே போய்விட்டார், நானே எழுந்து ரன் அவுட் செய்துவிடு எனச் சொல்ல இருந்தேன் என்றார். உங்களுடைய ஆஸ்திரேலிய கேப்டனை இப்படிச் சொல்கிறீர்களே என்று நான் கேட்டேன். தவறு யார் செய்தாலும் தவறுதான். நானே இதைப் பற்றி ஐசிசி கூட்டத்தில் பேசி வருகிறேன். இந்தத் தவறுக்கு ரன் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளேன் என்று அவர் சொன்னார் என அஸ்வின் பேசியுள்ளார். 

Tags : Ponting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT