ஐபிஎல்-2020

சென்னை சிறப்பான பந்துவீச்சு: 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது கொல்கத்தா

7th Oct 2020 09:28 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தாவில் தொடக்க ஆட்டக்காரராக சுனில் நரைனுக்குப் பதில் ஷுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதி களமிறங்கினார். முதல் 2 ஓவர்களில் பெரிதளவில் ரன் குவிப்பு இல்லை. 

இதன்பிறகு, கடந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே நம்பிக்கையுடன் இந்த இன்னிங்ஸையும் அதிரடியாகத் தொடங்கினார் திரிபாதி. இதனால், ரன் ரேட் ஓவருக்கு 9-ஐத் தாண்டியது. இந்த நிலையில் கில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். 

ADVERTISEMENT

திரிபாதி மட்டுமே இன்னிங்ஸை அதிரடியாக தொடர அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 9 ரன்களுக்கும், சுனில் நரைன் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனிடையே, தனது 31-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார் திரிபாதி.  

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இயான் மார்கன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் முறையே 7 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளைத் தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த திரிபாதியும் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கார்த்திக்கும் 1 பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசி ஓவரை பிராவோ சிறப்பாக வீச அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்குல், கரண் சர்மா, சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT