ஐபிஎல்-2020

தில்லி அபார பந்துவீச்சு: 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு படுதோல்வி

5th Oct 2020 11:13 PM

ADVERTISEMENT


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் தில்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

இதன்படி, முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.

தில்லி பேட்டிங்: ஸ்டாய்னிஸ் மிரட்டல் அரைசதம்: பெங்களூருவுக்கு 197 ரன்கள் இலக்கு!

197 ரன்கள் என்ற கடின இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பின்ச் 2 முறை அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்காமல் தப்பித்தார். மீண்டும் நோர்க்கியா வீசிய 2-வது ஓவரில் ஷிகர் தவான் கேட்ச் வாய்ப்பை தவறவிட, 3-வது முறையாக தப்பித்தார் பின்ச். இதனால், வாய்ப்புகளைப் பயன்படுத்தி பின்ச் பெரிய ஆட்டம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே, அஸ்வின் தனது முதல் ஓவரிலேயே படிக்கல் (4 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே அக்சர் படேல் பந்தில் பின்ச்சும் (13 ரன்கள்) ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, கோலியுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். டி வில்லியர்ஸ் 2 அற்புதமான பவுண்டரிகளை அடிக்க 9 ரன்களுக்கு நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 43 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, கோலி மற்றும் மொயீன் அலி நிதானம் காட்டி விளையாடினர். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் உயர உயர பெங்களூருவுக்கு நெருக்கடி அதிகரித்தது. 

இதையடுத்து, அலி தூக்கி அடிக்க முயன்று 11 ரன்களுக்கு அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானம் காட்டி அதிரடிக்கு மாற முயன்ற கோலியும் 43 ரன்களுக்கு ரபாடா வேகத்தில் வீழ்ந்தார். இதையடுத்து, பெங்களூருவுக்கு சரிவுதான்.

3 பவுண்டரிகள் அடித்து 17 ரன்கள் எடுத்த  வாஷிங்டன் சுந்தர், 11 ரன்கள் மட்டுமே எடுத்த துபே மற்றும் 1 ரன் எடுத்த உடானா ஆகியோர் ரபாடா பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிராஜ் 1 பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில், நோர்க்கியா வேகத்தில் போல்டானார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், தில்லி அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தில்லி அணித் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளும், நோர்க்கியா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT