ஐபிஎல்-2020

பாண்டிங்கை மீறி மன்கட் செய்வாரா அஸ்வின்? பின்ச்சுக்கு எச்சரிக்கை

5th Oct 2020 10:24 PM

ADVERTISEMENT


மன்கட் முறையில் அவுட் செய்யக் கூடாது என்று தில்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்ததையடுத்து, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பின்ச்சை எச்சரித்தார்.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. 

197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 3-வது ஓவரை அஸ்வின் வீசினார். 4-வது பந்தை அஸ்வின் வீசும்போது பின்ச் கிரீஸைவிட்டு வெளியே இருந்தார். இதைக் கவனித்த அஸ்வின் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு பின்ச்சை எச்சரித்தார்.

இதனால், மைதானத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்து டக் அவுட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தில்லி அணியினர் சிரித்தனர்.

ADVERTISEMENT

பாண்டிங்கின் கட்டளையால் அஸ்வின் மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்தாமல் எச்சரித்தாரா என்று தெரியவில்லை. ஆனால், இந்த முறை மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்தாமல் பேட்ஸ்மேனை எச்சரித்திருக்கிறார் அஸ்வின்.

இதையடுத்து, ரசிகர்கள் இதுபற்றி ட்வீட் செய்து வருகின்றனர். இதனால், தேசிய அளவிலான டிரெண்ட்டிங்கில் அஸ்வின் உள்ளார்.

முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசனில் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். கிரிக்கெட் விதிகளுக்குள்பட்டு இதைச் செய்திருந்தாலும் அஸ்வினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதைத் தொடர்ந்து, இந்த ஐபிஎல் சீசனில் தில்லிக்கு மாறினார் அஸ்வின். தில்லி பயிற்சியாளர் பாண்டிங் மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அஸ்வின், பாண்டிங் மற்றும் மன்கட் விவகாரம் பேசுபொருளாக அமைந்தது.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT