ஐபிஎல்-2020

தொடக்கம் சொதப்பல், பினிஷிங் அதிரடி: 154 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ராஜஸ்தான்

3rd Oct 2020 05:28 PM

ADVERTISEMENT


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 15-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆனால், ராஜஸ்தானுக்கு பவர் பிளேவில் அதிர்ச்சி காத்திருந்தது. இசுரு உடானா வீசியமுதல் ஓவரில் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் தலா 1 பவுண்டரி அடித்து அதிரடியுடனே இன்னிங்ஸைத் தொடங்கினர். உடனாவின் அடுத்த ஓவரை சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து மீண்டும் அதிரடியுடன் தொடங்கினார் பட்லர்.

ஆனால், 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஸ்மித் இந்த ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வாஷிங்டன் சுந்தரிடம் கொடுக்காமல் சைனியை அறிமுகப்படுத்தினார் விராட் கோலி. பலனளிக்கும் வகையில் முதல் பந்திலேயே அச்சுறுத்தலாக இருந்து வந்த பட்லர் ஆட்டமிழந்தார். சைனிக்கு அது விக்கெட் மைடன் ஓவராக அமைந்தது.

ADVERTISEMENT

5-வது ஓவரில் மற்றுமொரு புதிய பந்துவீச்சாளராக யுஸ்வேந்திர சஹாலை கொண்டு வந்தார் கோலி. இதற்கும் பலனளிக்கும் வகையில் முதல் பந்திலேயே நல்ல நிலையில் உள்ள சாம்சன் ஆட்டமிழந்தார்.

இதனால், பவர் பிளே ஓவர் முடிவில் 38 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, 6 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ராபின் உத்தப்பா 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து சஹால் பந்தில் விக்கெடைப் பறிகொடுத்தார்.

எனினும் இந்த ஆட்டத்தில் புதிதாகக் களமிறங்கிய மஹிபால் லோம்ரார் பொறுப்புடன் விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு சரியான ஒத்துழைப்பு இல்லை. அடுத்து களமிறங்கிய ரியான் பராக்கும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து உடனா பந்தில் ஆட்டமிழந்தார்.

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோம்ராரும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 114 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி கட்டத்தில் ராகுல் தெவாதியா மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் சற்று அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 150 ரன்களைக் கடந்தது. சைனி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார் தெவாதியா.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது. தெவாதியா 24 ரன்களுடனும், ஆர்ச்சர் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பெங்களூரு அணித் தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளையும், உடானா 2 விக்கெட்டுகளையும், சைனி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT