ஐபிஎல்-2020

மும்பை பந்துவீச்சில் பதுங்கியது பஞ்சாப்: 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

1st Oct 2020 11:25 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 13-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.

195 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. வழக்கம்போல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இந்த முறையும் நல்ல தொடக்கம் தந்தனர்.

முதல் 4 ஓவர்களில் 37 ரன்கள் சேர்த்த நிலையில், அகர்வால் 5-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, பஞ்சாப் அணிக்கு சரிவுதான். அடுத்து களமிறங்கிய கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காத நிலையில், க்ருணால் பாண்டியா பந்தில் போல்டானார். ராகுல் நிதானம் காட்ட, புதிதாகக் களமிறங்கிய பூரண் அதிரடியைக் காட்டத் தொடங்கினார். ஆனால், ராகுல் 17 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். ராகுலின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது.

தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினாலும், பூரண் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து அச்சுறுத்தலாகத் தென்பட்டார். ரன் ரேட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்து சரியான பந்தை பவுண்டரிக்கு விரட்டி வந்த அவர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு, பஞ்சாப் அணியால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. நீண்ட நேரம் திணறி வந்த மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சஹார் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து நீஷம் 7 ரன்கள், சர்பிராஸ் கான் 7 ரன்கள் எடுத்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, பந்துவீச்சாளர்களாலும் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT