ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த 22 வயது இஷான் கிஷன் ஜெயித்த கதை!

11th Nov 2020 11:09 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

தோனியைப் போலவே ஜார்க்கண்ட் பகுதியிலிருந்து வந்துள்ள மற்றொரு விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.

22 வயது இஷான், அதிரடி இடதுகை பேட்ஸ்மேன். 2016-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற யு-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். அப்போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது.

17 வயதில் ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்தார். 2016 ஐபிஎல்-லில் இஷான் கிஷனை ரூ. 35 லட்சத்துக்குத் தேர்வு செய்தது குஜராத் அணி. 2018 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 6.20 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். அந்த ஏலத்தில் இஷான் கிஷனுக்காக ரூ. 2.80 கோடி வரை தரத் தயாராக இருந்தது சிஎஸ்கே. ஆனால் மும்பையும் ஆர்சிபியும் கடுமையாகப் போராடியதில் கடைசியில் பெரிய தொகைக்குத் தேர்வானார். 

ADVERTISEMENT

2018-ல் 14 ஆட்டங்களில் விளையாடி 275 ரன்கள் எடுத்தார். 2 அரை சதங்கள், 17 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 149.45. ஆனால் சரியான உடற்தகுதி இல்லை, உடற்பயிற்சிகள் செய்வதில்லை என அவர் மீது புகார்கள் கூறப்பட்டன. மும்பை தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். எல்லாப் பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்ற முடியாது. ஆட்டத்தில் பக்குவம் வேண்டும் என்றார் ராபின் சிங். 

கடந்த வருடம் இஷான் கிஷனுக்குச் சரியாக அமையவில்லை. மும்பை அணி கோப்பையை வென்றபோதும் 7 ஆட்டங்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரை சதமும் எடுக்கவில்லை. இதனால் இந்த வருட ஆரம்பத்தில் இஷான் கிஷனுக்கு மும்பை அணி வாய்ப்புகள் தரத் தயங்கியது. முதல் இரு ஆட்டங்களில் சக ஜார்க்கண்ட் வீரர் செளரப் திவாரிக்கு வாய்ப்பளித்தது. அவரும் ஓரளவு நன்றாகவே விளையாடினார். பிறகு திவாரிக்குக் காயம் ஏற்படவே மீண்டும் மும்பை அணிக்குள் வந்தார் இஷான் கிஷன். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல் ஆட்டத்திலேயே 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். 9 சிக்ஸர்கள். மகிழ்ச்சியுடன் தொடர்ந்து அவரை அணியில் சேர்த்துக்கொண்டார் ரோஹித் சர்மா. 

கடந்த மூன்று வருடங்களாக பாண்டியா சகோதரர்கள், பொலார்டுடன் இணைந்து என் ஆட்டத்தை எப்படித் திட்டமிட வேண்டும் என அறிந்து கொண்டேன் என்கிறார் இஷான் கிஷன். ஆஃப் சைடில் சரியாக ரன்கள் எடுக்க மாட்டேன். இதை எதிரணிகள் அறிந்துகொள்வார்கள் என்பதால் அதிலும் கவனம் செலுத்தினேன். இப்போது தைரியமாக ஆஃப் சைடில் விளையாடுவேன் என்கிறார். 2018-ல் தன்னுடைய ஆட்டத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் கிடைத்த விமர்சனங்களைச் சரியாக எடுத்துக்கொண்டு இன்று நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். 

கெயில், பொலார்ட், டி வில்லியர்ஸ், ரோஹித் சர்மா, தோனி, பாண்டியா, ரிஷப் பந்த் என சிக்ஸர்களுக்குப் பெயர் போன வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இஷான் கிஷன். 30 சிக்ஸர்கள். 14 ஆட்டங்களில் நான்கு அரை சதங்களுடன் 516 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-ம் இடம். மும்பை அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் இஷான் கிஷன் தான். முதல் இரு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்காத போதும் கிடைத்த வாய்ப்புகள் அசத்தி தன் திறமையை நிரூபித்துள்ளார். 

ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திருப்புமுனை நிச்சயம் ஏற்படும். அதன் வழியாக வாழ்வில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். இஷான் கிஷனுக்கு இந்த வருட ஐபிஎல் போட்டி மகத்தானதாக அமைந்து விட்டது. ஒரு பெரிய எதிர்காலத்துக்கான தொடக்கமாக இது இருக்கப் போகிறது. 

Tags : Ishan Kishan explosive game
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT