ஐபிஎல்-2020

இந்திய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும்: கெளதம் கம்பீர்

11th Nov 2020 12:14 PM

ADVERTISEMENT

 

இந்திய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. டிரென்ட் போல்ட் 4 ஓவா்களில் 30 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் கிரிக்இஃன்போ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கெளதம் கம்பீர் கூறியதாவது:

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இல்லாவிட்டால் அது இந்தியாவுக்கு நேர்கிற துரதிர்ஷ்டமாகும். இதனால் ரோஹித் சர்மாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. சிறந்த அணி இருப்பதால் தான் ஒருவர் நல்ல கேப்டனாகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒருவர் நல்ல கேப்டன், மோசமான கேப்டன் என்பதை எதைக் கொண்டு அளவிட முடியும்? தனது அணியை வழிநடத்தி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை ரோஹித் சர்மா வென்றுள்ளார். 

இரு உலகக் கோப்பைகள், மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்ற தோனியை வெற்றிகரமான கேப்டன் என்கிறோம். ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன். இந்திய வெள்ளைப் பந்து அணிக்கோ அல்லது இந்திய டி20 அணிக்கோ ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாவிட்டால் அது துரதிர்ஷ்டவசமாகும். ஒருவரால் இதை விடவும் சாதித்துக்காட்ட முடியாது. 

கேப்டன் பொறுப்புகளை கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பகிர்ந்து அளிக்கலாம். டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாகவும் ஒருநாள், டி20 அணிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் இருக்கலாம். யாரும் மோசம் இல்லை. ஆனால் கோலியை விடவும் தலைமைப் பண்பில் உள்ள வித்தியாசத்தை ரோஹித் சர்மா காண்பித்துள்ளார். ஒருவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஒருவரால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. இருவரும் ஒரே சமயத்தில் ஐபிஎல் கேப்டன்களாகப் பதவியேற்றார்கள். ஒரு தலைவராகத் தன்னை நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா என்றார். 

Tags : Rohit Sharma Gautam Gambhir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT