ஐபிஎல்-2020

ஆட்டத்தை மாற்றிய பந்த்-ஷ்ரேயஸ்: மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு

10th Nov 2020 09:16 PM

ADVERTISEMENT


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். மும்பைக்கு வழக்கம்போல் முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரஹானே 2 ரன்களுக்கு போல்ட் வீசிய 3-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

யாரும் எதிர்பார்த்திராத மாற்றமாக அணியில் சேர்க்கப்பட்ட ஜெயந்த் யாதவ் 4-வது ஓவரை வீசுமாறு அழைக்கப்பட்டார். அதற்குப் பலனாக தவான் 15 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். இதனால், தில்லி 22 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ADVERTISEMENT

இதையடுத்து, கேப்டன் ஷ்ரேயஸுடன் ரிஷப் பந்த் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் நிதானம் காட்டி பாட்னர்ஷிப் அமைக்கத் தொடங்கியது. பந்த் படிப்படியாக அதிரடிக்கு மாறத் தொடங்கினார். இதனால் ரன் ரேட்டும் ஓவருக்கு 7-ஐத் தாண்டத் தொடங்கியது.

இந்த சீசனில் பெரிதும் சோபிக்காத பந்த் சீசனின் முதல் அரைசதத்தை எட்டினார். ஆனால், அரைசதம் அடித்த அதே ஓவரில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ், பந்த் இணை 4-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஷ்ரேயஸ் அதிரடி காட்டத் தொடங்கி அரைசத்தை எட்டினார். ஆனால், ஷிம்ரோன் ஹெத்மயர் சோபிக்கத் தவறி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, மும்பை அணி கடைசி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசியது. இதனால், பெரிதளவு பவுண்டரிகள் போகவில்லை. அக்சர் படேல் 9 ரன்களுக்கு நாதன் கூல்டர் நைல் வேகத்தில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் கடைசி ஓவரில் 1 சிக்ஸர் அடிக்க அந்த அணியின் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தில்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் 50 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்.

மும்பை தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கூல்டர் நைல் 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT