ஐபிஎல்-2020

5-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்!

10th Nov 2020 10:52 PM

ADVERTISEMENT


13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

தில்லி பேட்டிங் விவரம்: ஆட்டத்தை மாற்றிய பந்த்-ஷ்ரேயஸ்: மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு

157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து தில்லிக்கு அழுத்தம் தரத் தொடங்கினார் ரோஹித். மறுமுனையில் டி காக், ககிசோ ரபாடா ஓவரில் 18 ரன்கள் அடித்து அழுத்தத்தை அதிகரித்தார்.

ADVERTISEMENT

இந்த அதிரடி தொடக்கத்தால் மும்பை அணி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 5-வது ஓவரை வீச ஸ்டாய்னிலை அழைத்தார் ஷ்ரேயஸ். விளைவு முதல் பந்திலேயே டி காக் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் மும்பை பக்கம் அழுத்தம் திரும்பாதவாறு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில், சூர்யகுமார் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித்தின் தவறான ரன் அழைப்பால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், ரோஹித் அரைசதத்தைக் கடந்து அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இஷான் கிஷனும் ரோஹித்துடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால், மும்பை வெற்றி எளிதானது.

கடைசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. இந்த சூழலில் ரோஹித் சர்மா 68 ரன்களுக்கு நோர்க்கியா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய போலார்ட் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் ரபாடா வேகத்தில் போல்டானார்.

இதன்பிறகு, கிஷனும், ஹார்திக் பாண்டியாவும் மும்பையின் வெற்றி இலக்கை நெருங்கினர். வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் பாண்டியா ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய க்ருணால் பாண்டியா வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT