ஐபிஎல்-2020

சிஎஸ்கே... சறுக்கியது எங்கே...?

10th Nov 2020 06:33 AM | - ந.காந்திமதிநாதன்

ADVERTISEMENT


அடுத்த பந்தில் எதுவும் நிகழலாம். இந்த "சஸ்பென்ஸ்' தான் ஐபிஎல்-லின் சுவாரஸ்யம். இதில் எப்போதும், எதுவும் தலைகீழாக மாறும் என்பதை பார்த்தே வந்திருக்கிறோம். ஆனால், மூன்று முறை சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சீசனில் பிளே-ஆஃபுக்கு தகுதிபெறாமல் முதல் அணியாக வெளியேறியது முற்றிலும் எதிர்பாராதது. அதுவும் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக... 
ஓர் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பரபரப்புடன் வைத்திருந்து இறுதியில் வெற்றியை பதிவு செய்வது சிஎஸ்கே-வின் வழக்கம். ஓர் ஆட்டத்தின் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் தன்னை மீட்டெடுக்கும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கியது சென்னையின் போக்கு. 
இந்த சீசனில் விளையாடிய 14 ஆட்டங்களில் 6-இல் மட்டுமே வெற்றி. 8 தோல்விகள். அதில் இரு முறை ஹாட்ரிக் தோல்விகள். எங்கு தடம் மாறியது சிஎஸ்கே? 

இல்லாமல் போன பக்கபலம்... 
சீசனின் தொடக்கத்திலிருந்தே சிஎஸ்கேவை தடுமாற வைக்கும் சூழ்நிலைகள் அடுத்தடுத்து வந்தன. முதலில் சுரேஷ் ரெய்னா விளையாடாமல் விலகினார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. 

அடுத்த அடியாக, ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களால் நடப்பு சீசனில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்க, ஆல்-ரவுண்டராக சென்னையை அலங்கரித்த டுவைன் பிராவோ காயம் காரணமாக பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடவில்லை. 

இந்த முக்கியமான வீரர்கள் இல்லாமல் போனதன் தாக்கம் பின்னாளில் சென்னை அணியில் நன்றாகவே உணரப்பட்டது.

ADVERTISEMENT

ஆடும் லெவன்... 
சென்னையின் பேட்டிங் வரிசை நிலையான ஆட்டக்காரர் இன்றி தடுமாறியது. தோனி உள்பட எல்லோருமே ரன் சேகரிக்க போராடினாலும் பலன் இல்லை.

வாட்சன் பல்வேறு தருணங்களில் சிறப்பாக ஆடினார் என்றாலும், அவருக்கு தகுந்த பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நல்ல ஃபார்மில் இருந்த அம்பட்டி ராயுடு காயம் காரணமாக விலகியதும் பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. டூ பிளெஸ்ஸிஸ் தனியாளாக ரன் குவித்ததால், அவருக்கான நெருக்கடி அதிகரித்தது. அதே நேரத்தில், ஆல்ரவுண்டரான சாம் கரன் தனது அபார ஆட்டத்தால் பிராவோ இல்லாத குறையை தீர்த்தார்.

அருமையான தொடக்கத்தை தரும் நிலையான பார்ட்னர்ஷிப்பும், அந்த உத்வேகத்தை கடைசி வரை தாங்கிச் செல்ல மிடிர் ஆர்டரில் உறுதியான பேட்ஸ்மேன்களும் இல்லாதது பின்னடைவாக இருந்தது. சுரேஷ் ரெய்னா இருந்திருந்தால் மிடில் ஆர்டர் குறை பூர்த்தியாகியிருக்கும். பெüலிங்கிலும் இன்னும் சற்று ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை சரிக்கும் வகையில் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டிருக்கலாம். பிராவோ நீடித்திருந்தால் கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசியிருப்பார். 

சோபிக்காத கேதார் ஜாதவ் ஆடும் லெவனில் நீடித்ததற்கும், கடைசி ஆட்டங்களில் சிறப்பாக பந்துவீசிய இம்ரான் தாஹிருக்கு தொடக்க ஆட்டங்களிலேயே வாய்ப்பு வழங்கப்படாததற்கும் காரணம் தான் புரியவில்லை. 

அனைத்துக்கும் மேலாக, வழக்கமாக தோனி ஆடும் அவரது ஷாட்களும் இந்த சீசனில் இல்லாமல் போனது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிக்ஸர்களையே விளாசிய தோனி, பலத்தை பிரயோகித்தும் பந்து பெரும்பாலும் பவுண்டரி எல்லையை எட்டமுடியாத நிலை காணப்பட்டது. 
2-ஆவது ஆட்டத்திலிருந்தே அணி தடுமாறத் தொடங்கிவிட்டதாக தெரிவித்த தோனி, முழு திறனையும் பயன்படுத்திதான் விளையாடினோமா என சென்னை வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். 

கை கொடுக்காத வியூகம்... 
இலக்கை விரட்டுகிறபோது கடைசி ஓவர் வரையில் ஆட்டத்தை கொண்டு சென்று வெற்றி பெறுவது சென்னையின் வியூகங்களில் ஒன்று. பெரும்பாலும் அதையே அந்த அணி கையாளும் என்றாலும், இந்த சீசனில் அது கைகொடுக்காமல் போனது. இதர அணிகள் அதற்குச் சரியான எதிர் வியூகம் வகுத்தன.  ஆடுகளம் மற்றும் வானிலை சில இடங்களில் சென்னைக்கு எதிராக மாறின. "எதிர்பார்த்த தருணங்களில் டாஸ் எங்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை. முதலில் பேட்டிங் செய்தபோது, 2-ஆவது பாதியில் பனிப்பொழிவு காரணமாக ஆடுகளம் எதிரணி பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. முதலில் பெüலிங் செய்தபோது, 2-ஆவது பாதியில் பனிப்பொழிவு இல்லாமல் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாகியது' என்று தோனி கூறியிருந்தார். 

அனுபவம் அவசியம்... ஆனால்...
அணியின் வெற்றிக்கு திறமையும், துணிச்சலான ஆட்டமும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, அனுபவமும் முக்கியம். சென்னை அணியில் அனுபவ வீரர்கள் அபரிமிதமாகவே இருந்தனர். ஆனால், அணியின் சறுக்கலுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. 

நடப்பு சீசனில் எல்லா அணியிலும் துடிப்புமிக்க இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, சிஎஸ்கேவில் மூத்த வீரர்கள் பட்டியல் நீண்டது. அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும் ஆடும் லெவனில் அவர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. 

இளம் வீரர்களைக் காட்டிலும் மூத்த வீரர்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்ததே நடப்பு சீசனில் சிஎஸ்கே சரிவுக்குக் காரணம் என்று கிரிக்கெட் நட்சத்திரம் பிரையன் லாரா கூறினர். ஐபிஎல் போட்டியில் இளம் வீரர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் புதிய உத்திகளுக்கு பஞ்சமில்லை. ஆதலால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க சென்னை அணியிலும் தொடக்கத்திலேயே இளம் வீரர்களை களமிறக்கியிருக்க வேண்டும்.

கடைசியில் வாய்ப்பு... 
பிளே-ஆஃப் வாய்ப்பு ஏறத்தாழ அஸ்தமித்துவிட்ட நிலையில்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியது விமர்சனத்துக்குள்ளானது. 

இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பை வழங்காமல், மூத்த வீரர்களைக் கொண்டு பாதி தூரம் கடந்த பிறகு இளம் வீரர்களை குறை கூறுவது ஏற்புடையது அல்ல என்று எழுந்த குரல்களில் நியாயம் இல்லாமல் இல்லை. 

சோபிக்காமல் போனாலும் கேதார் ஜாதவ் ஆடும் லெவனில் தொடர்ந்து நீடித்தார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் போன்ற இளம் வீரர்களுக்கு அதுபோன்ற  வாய்ப்புகளை வழங்கியிருந்தால் அவர்கள் தங்களை நிரூபிக்கவும், சென்னை இன்னும் சற்று சிறப்பாக விளையாடியிருக்கவும் ஒருவேளை வாய்ப்பு இருந்திருக்கலாம். ஏனெனில் கடைசி 3 ஆட்டங்களிலுமே ருதுராஜ் அரைசதம் கடந்திருந்தார். 

அடுத்து என்ன...? 
தவறான முடிவுகள், எதிர்பாராத சூழ்நிலைகள் ஆகியவற்றால் இந்த சீசன் சிஎஸ்கே-வுக்கு மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதன் தாக்கம் நிச்சயம் அடுத்த சீசனில் சிஎஸ்கே-வில் பிரதிபலிக்கும். "அணியின் முக்கியமான வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்யவும், இளம் வீரர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவும் இதுவே தருணம்' என்று போட்டியிலிருந்து வெளியேறும்போது தோனி கூறியிருந்தார். 

எனவே நிச்சயம் அடுத்த சீசனுக்கு சிஎஸ்கே தன்னை சீர் செய்துகொள்ளும் என்று உறுதியாகத் தெரிகிறது. பொறுப்புகளை இளம் வீரர்களிடம் ஒப்படைக்கும் நேரம் என்பதற்கான அர்த்தம் என்ன... பொறுத்திருந்து பார்ப்போம். சீர்திருத்தங்களுக்குப் பிறகு சிஎஸ்கே சீறி வருமா என்பது அடுத்த சீசனில் தெரியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT