ஐபிஎல்-2020

இறுதி ஆட்டத்தில் போல்ட் விளையாடுவாரா? ரோஹித் தகவல்

9th Nov 2020 08:41 PM

ADVERTISEMENT


தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன. இந்த நிலையில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:

"ஒவ்வொரு 3, 4 ஆட்டங்களின் முடிவில் ஹார்திக் பாண்டியாவிடம் அவரது மதிப்பீட்டைப் பெறுவோம். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் பற்றி அவரிடம் பேசுவோம். தற்போதைய சூழலில் அவரால் இயல்பாக பந்துவீச முடியவில்லை. அனைத்து முடிவையும் அவரிடமே விட்டுவிட்டோம். அவர் இயல்பாக பந்துவீசுவதாக உணர்ந்தால், மகிழ்ச்சியுடன் பந்துவீசுவார். ஆனால், தற்போதைய சூழலில் பந்துவீசுவதை இயல்பாக உணரவில்லை.

ADVERTISEMENT

யாருக்கும் எவ்வித அழுத்தத்தையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் வேறு ஏதாவது எதிர்பார்த்து அதை அவரால் செய்ய முடியாமல் போனால், அது அணியின் மனவலிமையைக் குறைத்துவிடும். அப்படிப்பட்ட சூழலை நாங்கள் விரும்பவில்லை. ஹார்திக் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதற்கு அவரது பேட்டிங் முக்கியமானதாக இருந்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் அவரது ஆட்டத்தை வேறு ஒரு கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். நாம் அனைவரும் அதைப் பார்த்தோம். அவர் எங்களுக்கு மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

டிரென்ட் போல்ட் நன்றாக இருப்பதுபோல் தோற்றமளிக்கிறார். அவர் இன்று எங்களுடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். அப்போது எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம்."

இந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள டிரென்ட் போல்ட் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT