ஐபிஎல்-2020

தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்கு

1st Nov 2020 05:17 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி ஆட்டம். பஞ்சாப் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். வழக்கம்போல் ராகுல் நிதானமாக விளையாட அகர்வால் துரிதமாக ரன் சேர்த்து வந்தார். இதனால், முதல் 5 ஓவர்களில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச என்கிடியை அழைத்தார் தோனி. அதற்குப் பலனாக 2-வது பந்தில் அகர்வால் (26 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, என்கிடியை மீண்டும் 9-வது ஓவரை வீச அழைத்தார் தோனி. இந்த ஓவரில் ராகுல் (29 ரன்கள்) விக்கெட்டையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார் என்கிடி.

இந்த நெருக்கடியால், ஷர்துல் தாக்குர் பந்தில் நிகோலஸ் பூரன் 2 ரன்களுக்கும், இம்ரான் தாஹிர் சுழலில் கிறிஸ் கெயில் 12 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, மந்தீப் சிங் மற்றும் தீபக் ஹூடா பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். தொடக்கத்தில் பாட்னர்ஷிப்புக்காக பொறுமையாக விளையாடிய ஹூடா 15 ஓவர்களுக்குப் பிறகு அதிரடிக்கு மாறத் தொடங்கினார். ஜடேஜா பந்தில் மந்தீப் (14 ரன்கள்), என்கிடி பந்தில் நீஷம் (2 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார் ஹூடா.

என்கிடி வீசிய 18-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் 1 பவுண்டரியும் அடிக்க அவர் 26-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

கடைசி ஓவரிலும் அவர் 1 பவுண்டரி, சிக்ஸர் அடிக்க பஞ்சாப் அணி 150 ரன்களைக் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹூடா 30 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
 

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT