ஐபிஎல்-2020

கம்மின்ஸ் மிரட்டல் வேகம்: வெளியேறியது ராஜஸ்தான்!

1st Nov 2020 11:18 PM

ADVERTISEMENT


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து நடப்பு சீசனிலிருந்து வெளியேறியது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா பேட்டிங்: கேப்டன் மார்கன் விளாசல்: கொல்கத்தா 191 ரன்கள் குவிப்பு

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் ராபின் உத்தப்பா. அதன்பிறகு, பென் ஸ்டோக்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடிக்க முதல் ஓவரின் முதல் 5 பந்துகளில் 19 ரன்கள் கிடைத்தன. ஆனால், கடைசி பந்தில் உத்தப்பா ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

மீண்டும் 3-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் முதல் பந்தில் ஸ்டோக்ஸையும் (18 ரன்கள்), கடைசி பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தையும் (4 ரன்கள்) ஆட்டமிழக்கச் செய்தார். ஷிவோம் மவி வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 5-வது ஓவரில் ரியான் பராக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால், கொல்கத்தா முதல் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து திணறி வந்தது. ஜோஸ் பட்லர் மற்றும் ராகுல் தெவாதியா பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். பவுண்டரிகள் பெரிதளவில் அடிக்காதபோதிலும் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடினர். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 7-இல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயன்ற பட்லர், வருண் சக்ரவர்த்தி சுழலில் கம்மின்ஸிடம் கேட்ச் ஆனார். ராஜஸ்தானின் கடைசி நம்பிக்கையாக இருந்த அவர் 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதன்பிறகு, பவுண்டரிகள் போகாமல் விளையாடி வந்தது ராஜஸ்தான்.

தெவாதியா 31 ரன்கள், ஆர்ச்சர் 6 ரன்கள், தியாகி 2 ரன்கள் என சோபிக்கத் தவறி ஆட்டமிழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதேசமயம் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பையும் ராஜஸ்தான் இழந்தது.

இதன்மூலம், கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

கொல்கத்தா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மவி மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளையும், நாகர்கோடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT