சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி கடைசியாக எப்போது தோற்கடித்தது என்று தெரியுமா?

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 23 ஆட்டங்களில் சென்னை அணி 15 ஆட்டங்களிலும் ஆர்சிபி 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன...
சென்னையில் சிஎஸ்கேவை ஆர்சிபி அணி கடைசியாக எப்போது தோற்கடித்தது என்று தெரியுமா?

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2019 (12-வது சீசன் போட்டி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையில் சிஎஸ்கேவும், இந்திய கேப்டன் கோலி தலைமையில் ஆர்சிபி அணிகளும் களமிறங்குகின்றன. சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பெங்களூரு இதுவரை 1 முறை கூட பட்டம் வெல்லவில்லை. கோலியும், தோனியும் மோதும் ஆட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் இதுவரை விளையாடிய 23 ஆட்டங்களில் சென்னை அணி 15 ஆட்டங்களிலும் ஆர்சிபி 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை). 2014-ல் சிஎஸ்கே அணியைக் கடைசியாகத் தோற்கடித்தது ஆர்சிபி. அதற்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற ஆறு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வெற்றி கண்டுள்ளது. 

இதுதவிர, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், கடைசியாக சிஎஸ்கே அணியை ஆர்சிபி எப்போது தோற்கடித்தது தெரியுமா?

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008-ம் வருடம் மே 21 அன்று!

அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இந்த எளிதான இலக்கை அடைவதில் நிறைய குளறுபடி செய்தது சிஎஸ்கே. எதிர்பாராதவிதமாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி பெங்களூர் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 

2009-ம் வருட ஐபிஎல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.

2010-ம் வருடம்: 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது சென்னை. பெங்களூர் 161/4, சென்னை 162/5.

2011-ம் வருடம்: லீக் சுற்று ஆட்டத்தில் சிஎஸ்கே 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை 183/5, பெங்களூர் 162/7. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது. சென்னை 205/5, பெங்களூர் 147/8.

2012-ம் வருடம்: மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. பெங்களூர் 205/8, சென்னை 208/5.

2013-ம் வருடம்: மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெங்களூர் 165/6, சென்னை 166/6.

2014-ம் வருடம் சேப்பாக்கம் மைதானத்தின் மூன்று மாடங்கள் குறித்த பிரச்னைகளால் இங்கு நடக்கவேண்டிய 4 ஆட்டங்களும் தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு மாற்றப்பட்டன. 

2015-ம் வருடம்: சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை 148/9, பெங்களூர் 124.

2016, 2017 ஆகிய இரு வருடங்களிலும் சிஎஸ்கே அணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால், சேப்பாக்கத்தில் ஒரு ஐபிஎல் ஆட்டமும் நடைபெறவில்லை. 2018-ல் ஒரே ஒரு ஐபிஎல் ஆட்டம் மட்டும்தான் நடைபெற்றது. கொல்கத்தாவுக்கு எதிரான அந்தப் பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. பிறகு சென்னைக்கான ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் ஆறில் சென்னையும் ஓர் ஆட்டத்தில் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

ஆக, ஆர்சிபி அணி சேப்பாக்கத்தில் வெற்றியை ருசித்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. கோலி இந்த நிலையை இன்று மாற்றுவாரா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com