மிக மோசமான ஐபிஎல் அணிக்குக் கை கொடுக்குமா புதிய பெயர்?: தில்லி அணி நிலவரம்!

இந்த அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வென்றதில்லை என்பதைத் தனியாக வேறு சொல்லவேண்டுமா...
மிக மோசமான ஐபிஎல் அணிக்குக் கை கொடுக்குமா புதிய பெயர்?: தில்லி அணி நிலவரம்!

தில்லி ரசிகர்கள் மிகவும் பாவம் தான்.

இந்திய அணியில் விராட் கோலி, ஷிகர் தவன், ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா என தில்லி வீரர்களின் பங்களிப்புக்குக் குறையே இல்லை. ஆனால் அதே தில்லி அணி தான் ஐபிஎல் போட்டியில் மிக மோசமான அணியாகப் பெயர் பெற்றுள்ளது.

தில்லி டேர்டெவில்ஸ் என்கிற பெயரில் விளையாடிய தில்லி அணி, இதுவரை நடைபெற்ற 11 ஐபிஎல் போட்டிகளில் 3 முறை மட்டுமே பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது. அந்த மூன்றும் முதல் ஐந்து வருடங்களில் சாதித்தவை. 2012-க்குப் பிறகு பிளேஆஃப் என்றால் அதை எப்படி இன்பமாக உணர்வது என்பது தில்லி ரசிகர்களுக்குத் தெரியாது. அதேசமயம் புள்ளிகள் பட்டியலில் கடைசி 2 இடங்களை 5 முறை பெற்றுள்ளது. இந்தளவுக்கு வேறு எந்த ஐபிஎல் அணியும் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை. இந்த அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையையும் வென்றதில்லை என்பதைத் தனியாக வேறு சொல்லவேண்டுமா?

ஐபிஎல் ஏலத்தில் விஜய் சங்கரை தில்லி அணி இழந்தது பெரிய தவறாகப் பார்க்கப்படுகிறது. 11 வருடங்கள் கழித்து தில்லி அணிக்காக மீண்டும் விளையாடுகிறார் ஷிகர் தவன். அவருக்காக விஜய் சங்கர், ஷபாஸ் நதீம், அபிஷேக் சர்மா ஆகிய வீரர்களை விட்டுக்கொடுத்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் தில்லி அணிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பார்கள் என்று எண்ணப்படுகிறது. அணியை விடவும் அணி நிர்வாகம் மிகவும் பலமாக இருக்கிறது. ரிக்கி பாண்டிங், முஹமது கயிஃப், செளரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் அணிக்கு ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் அதிகத் தோல்விகளை அடைந்துள்ளதால் இதுவரை 107 வீரர்களைக் கொண்டு விளையாடியுள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிக வீரர்களைப் பயன்படுத்திய அணிகளில் ஆர்சிபிக்கு (120 வீரர்கள்) அடுத்த இடத்தில் உள்ளது தில்லி அணி. 

இந்த வருடம் விளையாடுகிற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை. பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.

தில்லி கேபிடல்ஸ் என்கிற புதிய பெயருடன் இந்த வருடம் களமிறங்குகிறது. புதிய பெயர் ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தருமா என்று பார்க்கலாம். 

தில்லி ஐபிஎல் உத்தேச அணி: 

காலின் மன்ரோ, பிருத்வி ஷா, ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), காலின் இங்க்ரம், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷல் படேல், சந்தீப் லமிச்சானே, ககிசோ ரபாடா, அவேஷ் கான், இஷாந்த் சர்மா. 

ஐபிஎல் புள்ளிவிவரம்

ஆட்டங்கள் - 162, வெற்றி - 67.
பிளே ஆஃப் தகுதி: 2008, 2009, 2012. 
அதிக ரன்கள்: கெளதம் கம்பீர் (4217 ரன்கள்)
அதிக விக்கெட்டுகள்: அமித் மிஷ்ரா (146 விக்கெட்டுகள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com