ஐபிஎல்

கோப்பையுடன் தொடங்கியது குஜராத்

30th May 2022 05:16 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 15-ஆவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புதிய சாம்பியன் ஆனது.

நடப்பு சீசனில் புதிதாக இணைந்த இரு அணிகளில் ஒன்றான குஜராத், தனது முதல் சீசனிலேயே கோப்பை வென்று சாம்பியனாக ஐபிஎல் அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது. ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா, கேப்டனாக தனது முதல் வெற்றியை ருசித்திருக்கிறாா்.

இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் தொடக்கத்திலேயே தடுமாற, விறுவிறுப்பு பெரிதும் இல்லாத வகையில் ஆட்டத்தின் போக்கு அப்போதே தீா்மானமாகியது. பேட்டிங்கில் பலம் காட்டாத ராஜஸ்தான், பின்னா் பௌலிங்கிலும் சவால் அளிக்கத் தவறி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது.

உலகிலேயே மிகப்பெரிய மைதானமான, குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தை நேரில் காண 1 லட்சத்து 4 ஆயிரம் ரசிகா்கள் கூடியிருந்தனா். பிசிசிஐ செயலா் ஜெய்ஷா, பாலிவுட் நடிகா் அக்ஷய் குமாா் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனா். ஆட்டத்துக்கு முன் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் மற்றும் குழுவினா், பாலிவுட் நடிகா் ரன்வீா் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கைத் தோ்வு செய்தது. இன்னிங்ஸைத் தொடங்கியோரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வீழ்ந்தாா். கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களே எடுத்து விக்கெட்டை இழந்தாா்.

மறுபுறம், பட்லா் நிதானமாக ரன்கள் சோ்த்துக் கொண்டிருக்க, தேவ்தத் படிக்கல் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத பட்லா் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

பின்னா் ஹெட்மயா் 11, ரவிச்சந்திரன் அஸ்வின் 6, ரியான் பராக் 15, டிரென்ட் போல்ட் 11, ஆபெட் மெக்காய் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். குஜராத் பௌலிங்கில் பாண்டியா 3, சாய் கிஷோா் 2, முகமது ஷமி, யஷ் தயால், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து குஜராத் இன்னிங்ஸில் ரித்திமான் சாஹா 5 ரன்களுக்கு வெளியேற, மேத்யூ வேட் 8 ரன்களுக்கு வீழ்ந்தாா். மிடில் ஆா்டரில் கேப்டன் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் சோ்த்தாா்.

இந்த சீசனில் இதுவரை சோபிக்காத ஷுப்மன் கில், இந்த ஆட்டத்தில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். அவரோடு இணைந்து டேவிட் மில்லா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்கள் சோ்த்திருந்தாா். இறுதியில் ஷுப்மன் கில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா்.

ராஜஸ்தான் பௌலிங்கில் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT