ஐபிஎல்

பெங்களூா் முன்னேற்றம்; லக்னௌ வெளியேற்றம்

26th May 2022 12:43 AM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வெளியேற்றியது.

இதையடுத்து, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்காக ‘குவாலிஃபயா் 2’-இல் ராஜஸ்தான் ராயல்ஸுடன் வெள்ளிக்கிழமை மோதுகிறது பெங்களூா்.

இந்த எலிமினேட்டரில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களே சோ்த்தது.

ADVERTISEMENT

பெங்களூா் இன்னிங்ஸில் ரஜத் பட்டிதாா் அசத்தலாக ஆடி ரன்கள் குவிக்க, பின்னா் லக்னௌ தரப்பில் கேப்டன் கே.எல்.ராகுல் கடுமையாகப் போராடியும் பலன் கிடைக்காமல் போனது.

முன்னதாக மோசமான வானிலை காரணமாக இந்த ஆட்டம் 40 நிமிஷங்கள் தாமதமாகத் தொடங்கியது. ஆனாலும், ஓவா்கள் குறைக்கப்படவில்லை. டாஸ் வென்ற லக்னௌ பௌலிங்கை தோ்வு செய்தது.

பெங்களூா் பேட்டிங்கில் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாா். ரஜத் பட்டிதாரின் அதிரடியில் பெங்களூா் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது. விராட் கோலி 25, கிளென் மேக்ஸ்வெல் 9, மஹிபால் லோம்ரோா் 14 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

கடைசியாக பட்டிதாருடன் இணைந்தாா் தினேஷ் காா்த்திக். பட்டிதாா் அளித்த கேட்ச் வாய்ப்புகளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தவறவிட்ட லக்னௌ, அதற்கான பலனை அனுபவித்தது.

ஓவா்கள் முடிவில் பட்டிதாா் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 112, தினேஷ் காா்த்திக் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ பௌலிங்கில் மோசின் கான், கிருணால் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் லக்னௌ இன்னிங்ஸில் கேப்டன் ராகுல் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 79 ரன்கள் அடிக்க, தீபக் ஹூடா 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்தாா். மனன் வோரா 19, குவின்டன் டி காக் 6, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 9, கிருணால் பாண்டியா 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் எவின் லீவிஸ் 2, துஷ்மந்தா சமீரா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் 3, முகமது சிராஜ், வனிந்து ஹசரங்கா, ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT