ஐபிஎல்

ஹசரங்கா சுழலில் சிக்கிய ஹைதராபாத்: பெங்களூரு அணிக்கு 7ஆவது வெற்றி

8th May 2022 07:50 PM

ADVERTISEMENT

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நடப்பு ஐபிஎல் தொடரின் 54ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ராஜத் பட்டிடர், டு பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்துபோது பட்டிடர் சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இருப்பினும், நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய மாக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 24 பந்துகளி்ல் 33 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் இன்னிங்ஸ் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்றபோது, தினேஷ் கார்த்திக் களமிறங்கி சரவெடி நிகழ்த்தினார்.  நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது.  நிலைத்து நின்று ஆடிய டு பிளெஸ்ஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

ஹைதராபாத் அணி சார்பாக சுச்சித் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ராகுல திரிபாதி சிறப்பாக விளையாடினார். அவர் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எஞ்சிய பேட்டர்களில் மார்க்ரம் 21, நிக்கோலஸ் பூரன் 19 மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். 

ADVERTISEMENT

மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. பெங்களூரு பௌலிங்கில் ஹசரங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT