ஐபிஎல்

வார்னர், பாவெல் அதிரடி: டெல்லி 207 ரன்கள் குவிப்பு

5th May 2022 09:31 PM

ADVERTISEMENT


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (வியாழக்கிழமை) விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்த முறை டேவிட் வார்னருடன் தொடக்க ஆட்டக்காரராக மந்தீப் சிங் களமிறங்கினார். ஆனால், முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வார்னர் ரன் ரேட்டை பார்த்துக்கொள்ள கேப்டன் ரிஷப் பந்த் நிதானம் காட்டினார். ஷ்ரேயஸ் கோபால் 9-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசிய பந்த் அதே ஓவரின் கடைசி பந்தில் போல்டானார்.

ADVERTISEMENT

அவர் ஆட்டமிழந்தபோது டெல்லி அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, வார்னருடன் ரோவ்மன் பாவெல் இணைந்தார். வார்னர் 34-வது பந்தில் அரைசதத்தைக் கடக்க பாவெல் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டலை வெளிப்படுத்தத் தொடங்கினார். இதனால், ரன் ரேட் ஓவருக்கு 9-ஐ தாண்டியது.

புவனேஷ்வர் குமார் ஓவர் தவிர்த்த மற்ற ஓவர்கள் அனைத்திலும் சிக்ஸர், பவுண்டரி பறந்தன. உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை பறக்கவிட்ட பாவெல் 30-வது பந்தில் அரைசதத்தைக் கடந்தார்.

அதன்பிறகு, உம்ரான் மாலிக் வேகத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாவெல் சிக்ஸரைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் உம்ரான் மாலிக் 157 கி.மீ. வேகத்தில் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வார்னர் 58 பந்துகளில் 92 ரன்களும், பாவெல் 35 பந்துகளில் 67 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷான் அபாட் மற்றும் ஷ்ரேயஸ் கோபால் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Tags : David Warner
ADVERTISEMENT
ADVERTISEMENT