ஐபிஎல்

மீண்டும் ஹீரோவான தெவாடியா: கடைசி ஓவரில் குஜராத் 'த்ரில்' வெற்றி

28th Mar 2022 11:30 PM

ADVERTISEMENT


லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர். துஷ்மந்தா சமீரா வீசிய முதல் ஓவரிலேயே அதிரடி காட்ட முயற்சித்த கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் சிறப்பான யார்க்கர் பந்து மூலம் விஜய் சங்கரை (4) போல்டாக்கினார் சமீரா. அடுத்து களமிறங்கிய கேப்டன் பாண்டியா வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை சற்று தணித்தார்.

ADVERTISEMENT

வேட் மற்றும் பாண்டியா சற்று பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து நல்ல நிலையை வந்தடைந்தது.

இதன்பிறகு, கிருனால் பாண்டியா பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஹார்திக் பாண்டியா 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீபக் ஹூடாவின் அடுத்த ஓவரிலேயே மேத்யூ வேடும் 30 ரன்களுக்கு போல்டானார்.

இதன்பிறகு, சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் கேஎல் ராகுல். இதனால், 10 முதல் 15 ஓவர்கள் வரை குஜராத்தால் 19 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் காரணமாக கடைசி 5 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 68 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது.

ராகுல் செய்த 2 தவறுகள்?

ஆனால், இந்த இடத்தில் மீண்டும் சுழற்பந்துவீச்சாளரான ஹூடாவிடமே பந்தைக் கொடுத்தார் ராகுல். இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட ராகுல் தெவாடியா அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். அதே ஓவரில் டேவிட் மில்லரும் தன் பங்குக்கு அடுத்தடுத்து 1 பவுண்டரியும், 1 சிக்ஸரையும் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் கிடைக்க கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

அடுத்த ஓவரையாவது வேகப்பந்துவீச்சாளர்களிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் ரவி பிஷ்னாயிடமே பந்தைக் கொடுத்தார் ராகுல். இந்த ஓவரை சிக்ஸருடன் தொடங்கினார் தெவாடியா கடைசி 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைக்க கடைசி 3 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் மில்லரை சிக்ஸர் அடிக்க விட்டாலும், அடுத்த பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்தார். மில்லர் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள்: 

19-வது ஓவரை வீசிய சமீரா முதல் பந்திலும், 5-வது பந்தில் பவுண்டரி கொடுத்தாலும் அந்த ஓவரில் மொத்தம் 9 ரன்கள் மட்டுமே குஜராத்தால் எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய முதலிரண்டு பந்துகளை சதரங்கானி பவுண்டரிக்கு விளாச லக்னௌ தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.

4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி தெவாட்டியா வெற்றியை உறுதி செய்தார்.  19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் தெவாட்டியா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். சதரங்கானி 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அவ்வப்போது ஹீரோவாக திகழ்ந்து வந்த தெவாட்டியா குஜராத்துக்காக முதல் ஆட்டத்திலேயே ஹீரோவாகியுள்ளார்.


 

Tags : KL rahul
ADVERTISEMENT
ADVERTISEMENT