ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் மிட்செல் மார்ஷ் விளையாடுவாரா?: பரிதவிப்பில் தில்லி கேபிடல்ஸ் அணி

28th Mar 2022 02:00 PM

ADVERTISEMENT

 

தில்லி அணி முதல் ஆட்டத்தில் மும்பை அணியைத் தோற்கடித்தது. எனினும் அந்த அணியில் டிம் சைஃபர்ட், ரோவ்மேன் பவல் என இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடினார்கள்.

தில்லி அணியில் உள்ள டேவிட் வார்னரும் மிட்செல் மார்ஷும் பாகிஸ்தானில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதால் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. ஏப்ரல் 6-க்குப் பிறகுதான் இந்தியாவுக்கு வரவுள்ளார்கள். நோர்கியா காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிலிருந்து தாமதமாக வந்த லுங்கி என்கிடியும் முஸ்தாபிசுர் ரஹ்மானும் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஏப்ரல் 2 அன்று விளையாட இருவரும் தயாராகி விடுவார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாடவிருந்த மிட்செல் மார்ஷுக்குப் பயிற்சியின்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மார்ஷுக்குப் பதிலாக கேம்ரூன் கிரீன் நாளை தொடங்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையடுத்து காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்தும் மிட்செல் மார்ஷ் விலக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. அப்படி நேர்ந்தால் அது அந்த அணிக்குப் பெரிய சிக்கலை அளிக்கும். ஏற்கெனவே முதல் 3 ஆட்டங்களில் மார்ஷ் விளையாட மாட்டார் என்றிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்தே விலக நேர்ந்தால் அது தில்லி அணியின் திட்டங்களைப் பாதிக்கக்கூடும். ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு மார்ஷை தில்லி அணி தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் மார்ஷ். 

மார்ஷால் ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போனால் அது மூன்றாவது வருடமாக அவர் இப்போட்டியைத் தவறவிடும் சூழல் ஏற்படும். 2020-ல் சன்ரைசர்ஸுக்காக முதல் ஆட்டத்தில் விளையாடியபோது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். கடந்த வருடம் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியாத காரணத்தால் போட்டியிலிருந்து விலகினார். தற்போது, காயம் காரணமாக மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது குறித்து விரைவில் மார்ஷ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT