ஐபிஎல்

தூக்கி நிறுத்திய ஹூடா, படோனி இணை: லக்னௌ 158 ரன்கள் குவிப்பு

28th Mar 2022 09:25 PM

ADVERTISEMENT


குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி குஜராத்துக்குப் பிரமாதமான தொடக்கத்தைத் தந்தார் முகமது ஷமி. அடுத்த ஓவரில் குயின்டன் டி காக்கையும் (7 ரன்கள்) போல்டாக்க லக்னௌ திணறியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் எவின் லீவிஸ் (10) விக்கெட்டை வருண் ஆரோன் வீழ்த்தினார். முதலிரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், பவர் பிளேவில் ஷமிக்கு மூன்றாவது ஓவரை கொடுத்தார் பாண்டியா. இதற்குப் பலனாக மணீஷ் பாண்டேவும் (6) ஷமி பந்தில் போல்டானார்.

ADVERTISEMENT

பவர் பிளே முடிவில் லக்னௌ அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு, தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி நிதானம் காட்டி பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஹார்திக் பாண்டியா வீசிய 11-வது ஓவரிலிருந்து ஹூடா அதிரடிக்கு மாறினார். சிக்ஸரும், பவுண்டரியுமாக அடிக்கத் தொடங்கிய ஹூடா 36-வது பந்தில் அரைசதத்தைக் கண்டார்.

மறுமுனையில் 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த படோனியும் அதிரடிக்கு மாறத் தொடங்கினார். அவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடிக்கத் தொடங்க லக்னௌ அணியின் ரன் ரேட் ஓவருக்கு 7-ஐ தாண்டத் தொடங்கியது.

இந்த நிலையில் ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் ஹூடா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், படோனி தனது அதிரடியைத் தொடர்ந்தார். லாக்கி பெர்குசன் வீசிய 19-வது ஓவரில் அட்டகாசமான சிக்ஸரை பறக்கவிட்ட படோனி 38-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். வருண் ஆரோன் வீசிய கடைசி ஓவரில் அவர் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. இறுதியில் படோனிக்கு ஒத்துழைப்பு தந்து அதிரடி காட்டிய கிருனால் பாண்டியா 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குஜராத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : Deepak Hooda
ADVERTISEMENT
ADVERTISEMENT