ஐபிஎல் போட்டியிலிருந்து ஒரு வாரம் விலகி, மக்களின் போராட்டத்துக்கு இலங்கை வீரர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டி இலங்கை மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ராஜபட்ச அரசு பதவி விலக வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் அதிபா் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிா்த்து ஆளும்கட்சியைச் சோ்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்துள்ளார்கள்.
இந்நிலையில் இலங்கையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் இலங்கை வீரர்கள் அப்போட்டியிலிருந்து விலகி, மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
சில கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய நாட்டைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அரசாங்கத்துக்கு எதிராகப் பேசப் பயப்படுகிறார்கள். அமைச்சகத்தின் கீழ் உள்ள கிரிக்கெட் வாரியத்தில் இந்த கிரிக்கெட் வீரர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால் தங்கள் இடத்தைக் காப்பற்றிக் கொள்கிறார்கள். போராட்டத்துக்கு ஆதரவாக சில இளம் வீரர்கள் பேசியுள்ளார்கள். இதனால் அவர்களும் ஏதாவது செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள்.
ஒரு விஷயம் தவறாக நடைபெற்றால் உங்கள் வியாபாரத்தைப் பற்றி எண்ணாமல் அதற்கு எதிராகப் பேசத் துணிச்சல் இருக்கவேண்டும். நான் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கேட்கிறார்கள். கடந்த 19 வருடங்களாக அரசியலில் உள்ளேன். இது அரசியல் விவகாரம் கிடையாது. இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் அரசியல்வாதிகளும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதுதான் இந்த நாட்டு மக்களின் பலம். ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை அனைவரும் அறிவார்கள். அவர்கள் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. அவர்கள் ஒரு வாரம் விலகி, இங்கு வந்து மக்களின் போராட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.