ஐபிஎல்

சென்னை மீண்டும் தோல்வி: ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி

9th Apr 2022 07:22 PM

ADVERTISEMENT


சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். வில்லியம்சன் நிதானம் காட்ட, அபிஷேக் சர்மா அதிரடி காட்டினார். இதனால் பவர் பிளே முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் சென்னைக்குப் பலனளிக்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்கமும்பைக்கு எதிராக களமிறங்குகிறார் மேக்ஸ்வெல்: பெங்களூரு பந்துவீச்சு

அபிஷேக் சர்மா 31-வது பந்தில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதே ஓவரில் சிக்ஸர் பறக்கவிட மீண்டும் அதிரடி பாணியிலேயே ஹைதராபாத் பேட்டிங் செய்தது. இதனால், சென்னை அணியால் ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள்ளேயே கொண்டுவர முடியவில்லை.

கடைசி 4 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். அந்த ஓவரில் அவர் மிகவும் தாராளமாக 19 ரன்களைக் கொடுக்க, கடைசி 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே ஹைதராபாத்துக்குத் தேவைப்பட்டன.

வெற்றி இலக்கை அடையச் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஓவரிலேயே அபிஷேக் சர்மா 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், நிகோலஸ் பூரன் மற்றும் ராகுல் திரிபாதி அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் சென்னை அணி தொடர்ந்து நான்காவது ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஹைதராபாத் அணி இரண்டு புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

Tags : CSK
ADVERTISEMENT
ADVERTISEMENT