ஐபிஎல்

சஹாலைக் கொடுமைப்படுத்திய சம்பவம்: வாழ்நாள் தடைக்கு ரவி சாஸ்திரி பரிந்துரை

9th Apr 2022 05:50 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் சஹாலை ஒரு வீரர் 15-வது மாடியிலிருந்து தொங்க விட்ட சம்பவம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

2013-ல் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது 15-வது மாடியிலிருந்து தன்னைத் தொங்க விட்ட வீரரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் பிரபல சுழற்பந்து வீச்சாளர் சஹால்.

2011 ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் இரு வருடங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2013-ல் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனான பிறகு ஒரு ஆட்டத்தில் சஹால் விளையாட வாய்ப்பு வழங்கினார். 2014-ல் ஆர்சிபி அணிக்கு ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வானார் சஹால். அதன்பிறகு கடந்த வருடம் வரை ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்த சஹால், இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

ADVERTISEMENT

அஸ்வின், கருண் நாயர் ஆகிய ராஜஸ்தான் வீரர்களுடனான விடியோ உரையாடலில் தனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்துப் பேசியுள்ளார் சஹால். அவர் கூறியதாவது:

இந்தச் சம்பவம் பலருக்கும் தெரியாது. இதைப் பற்றி நான் பேசியதில்லை. 2013-ல் நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். எங்களுக்கு பெங்களூரில் ஓர் ஆட்டம் இருந்தது. ஆட்டம் முடிந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டோம். ஒரு வீரர் அப்போது மிகவும் குடித்திருந்தார். அவர் பெயரைச் சொல்ல மாட்டேன். நன்குக் குடித்திருந்த அவர், என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். என்னை வெளியே அழைத்துச் சென்றவர், பால்கனியிலிருந்து என்னைத் தொங்க விட்டார். அது 15-வது மாடி. என் கைகள் அவர் கழுத்தைச் சுற்றிப் பிடித்திருந்தன. திடீரென அங்குப் பலரும் வந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தினார்கள். எனக்கு மயக்கம் வருவது போல ஆகிவிட்டது. அவர்கள் எனக்குக் குடிக்கத் தண்ணீர் தந்தார்கள். அப்போதுதான் நான் உணர்ந்தேன், வெளியே செல்லும்போது எந்தளவுக்குப் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்று. நான் தப்பித்தது பெரிய விஷயம் என்று தான் இச்சம்பவத்தை நினைப்பேன். சிறிய தவறு ஏற்பட்டிருந்தாலும் நான் கீழே விழுந்திருப்பேன் என்றார்.

சஹாலின் இந்தப் பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹால் குறிப்பிடும் சம்பவம் குறித்து பிசிசிஐ விசாரணை செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சஹாலைக் கொடுமைப்படுத்திய வீரர் இன்று அச்செயலை செய்திருந்தால் அவருக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கிரிக்இஃன்போ இணையத்தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இது சிரிக்கவேண்டிய விஷயமல்ல. எனக்கு அந்த வீரர் யார் என்று தெரியாது. அன்று அவர் நிதானத்தில் இல்லை. அதுதான் உண்மையென்றால் இது மிகவும் வருந்தவேண்டிய விஷயம். ஏனெனில் ஒருவரின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது. இதை மக்கள் நகைச்சுவையாக எண்ணலாம். எனக்கு இது வேடிக்கையாகத் தெரியவில்லை. இதைச் செய்ய முயன்றவர் அன்று இருந்த நிலை சரியாக இல்லை. அப்படி இருக்கும்போது இதுபோன்ற ஒரு செயல் பல தவறுகள் நடக்கக் காரணமாகிவிடும். எனவே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. 

இன்று இப்படி நடந்தால் அந்த வீரருக்கு வாழ்நாள் தடை வழங்கப்பட வேண்டும். பிறகு அந்த வீரரை விரைவாக மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பவேண்டும். இனிமேல் அந்த வீரர் கிரிக்கெட் பக்கமே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தான் செய்தது வேடிக்கையானதா என அவருக்குப் புரியும். இதுபோன்று நடக்கும்போது உடனடியாக நிர்வாகிகளிடம் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT