ஐபிஎல்

மீண்டும் சிக்ஸர் மழை: இருமுறை அதிசயம் நிகழ்த்திய தெவாதியா

DIN

ஐபிஎல் 2020

பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்குக் கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டன. 19.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது ராஜஸ்தான் அணி. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்தார் ராகுல் தெவாதியா. ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார் தெவாதியா

9-வது ஓவரின் முடிவில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ராகுல் தெவாதியா 4-ம் நிலை வீரராகக் களமிறங்கினார்.இடது கை பேட்ஸ்மேன் என்பதால் லெக் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் அனுப்பப்பட்டார். 

224 ரன்கள் என்கிற இலக்கை விரட்டும் முயற்சியில் இருந்தபோது ஆரம்பக்கட்டத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார் தெவாதியா. முதல் 19 பந்துகளில் அவரால் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 

மேக்ஸ்வெல் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன் பிறகு லாங் ஆஃப்பில் பந்தைத் தட்டிவிட்ட பிறகு சிங்கிள் ரன் ஓட மறுத்தார். தெவாதியா பேட்டிங் செய்ய வந்தால் பந்துகளை வீணடிப்பார் என அவர் நினைத்தார். இதனால் தெவாதியா மேலும் அவமானப்படுத்தப்பட்டார். 

17-வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை. ஆடுகளத்தில் தெவாதியா இன்னும் இருந்ததால் நம்பிக்கை இழந்தார்கள் ராஜஸ்தான் அணி ரசிகர்கள்.

கடைசிக்கட்டத்தில் காட்ரெல் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார் தெவாதியா. 6-வது பந்திலும் மற்றொரு சிக்ஸர். 5 சிக்ஸர்களுடன் அந்த ஓவரில் 30 ரன்களை தெவாதியா எடுத்தபோது கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் திகைத்தது. பிறகு ஷமி பந்துவீச்சில் இன்னொரு சிக்ஸர் அடித்து மொத்தமாக 7 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தெவாதியா. கடைசியில் வெற்றிக்கனியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

ஹரியாணாவைச் சேர்ந்த 28 வயது தெவாதியா அதிரடி பேட்ஸ்மேனாகவும் லெக் ஸ்பின்னராகவும் உள்ளதால் இந்திய அணியில் அவரால் ஒரு ஆல்ரவுண்டராக சாதிக்க முடியும் என ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். இதையடுத்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டார் தெவாதியா. எனினும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு இதுவரை தெவாதியாவுக்குக் கிடைக்கவில்லை.

ஐபிஎல் 2021

கடந்த வருடம் தெவாதியாவுக்குச் சரியாக அமையவில்லை. 2020 ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் 255 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 139.34, சிக்ஸர்கள் - 17. ஆனால் ஐபிஎல் 2021 போட்டியில் 14 ஆட்டங்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 105.44. 6 சிக்ஸர்கள் மட்டுமே. 

ஐபிஎல் 2022

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9 கோடிக்கு தெவாதியை குஜராத் அணி தேர்வு செய்தது. சிஎஸ்கே 8.75 கோடி வரை தெவாதியைத் தேர்வு செய்ய ஆர்வம் காண்பித்துக் கடைசியில் பின்வாங்கியது. 

பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சாவகாசம் எதுவும் இல்லாமல் களமிறங்கியவுடன் அடித்தாட வேண்டிய சூழல். 5 பந்துகளில் 18 ரன்கள் தேவை. மில்லர் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவை. களத்தில் தெவாதியா. 2020-ல் அடித்ததை மீண்டும் அடிக்க முடியுமா என்று பலரும் சந்தேகத்துடன் பார்த்தபோது, தன்னால் முடியும் என அந்த இரு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து நிரூபித்தார் தெவாதியா. ஓர் அதிசயத்தை இவரால் மட்டும் எப்படி இன்னொருமுறை நிகழ்த்த முடிகிறது. ஐபிஎல் போட்டியில் இதற்கு முன்பு தோனி மட்டுமே கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்றிருக்கும்போது இரு சிக்ஸர்கள் அடித்து வெற்றி அளித்திருக்கிறார்.

பெவன், தோனி, க்ளூஸ்னர், வரிசையில் தெவாதியாவும் ஒரு நல்ல அதிரடி வீரராக, கடைசிக்கட்டத்தில் அணியைக் கரை சேர்க்கும் பொறுப்பைச் சுமப்பவராக உள்ளார். இந்தப் பங்களிப்பு இந்திய அணிக்கும் கிடைக்கட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூா் அணை நிலவரம்

சேலத்தில் சிறை அதாலத்

சேலத்திலிருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT