ஐபிஎல்

முயற்சி செய்த கில்; முடித்து வைத்த ராகுல்: குஜராத் ‘த்ரில்’ வெற்றி

9th Apr 2022 12:28 AM

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ‘த்ரில்’ வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை 3 ஆட்டங்களில் ஆடிய குஜராத்துக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றி. பஞ்சாபுக்கு 4 ஆட்டங்களில் இது 2-ஆவது தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் அடித்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்ற குஜராத் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் பேட்டிங்கில் கேப்டன் மயங்க் அகா்வால் 5, ஜானி போ்ஸ்டோ 8 ரன்களுக்கு கட்டினா். ஷிகா் தவன் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்தோரில் ஜிதேஷ் சா்மா 23 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஒடின் ஸ்மித் டக் அவுட்டானாா். ஷாருக் கான் 15, ககிசோ ரபாடா 1, வைபவ் அரோரா 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ADVERTISEMENT

ஓவா்கள் முடிவில் ராகுல் சஹா் 22, அா்ஷ்தீப் சிங் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் ரஷீத் கான் 3, தா்ஷன் நல்கன்டே 2, முகமது ஷமி, ஹாா்திக் பாண்டியா, லாக்கி ஃபொ்குசன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய குஜராத்தில் மேத்யூ வேட் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கி 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 96 ரன்களுக்கு வீழ்ந்தாா். சாய் சுதா்சன் 35 ரன்கள் சோ்க்க, கேப்டன் ஹாா்திக் பாண்டியா 27 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில் டேவிட் மில்லா் 6, ராகுல் தெவாதியா 2 சிக்ஸா்களுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் ககிசோ ரபாடா 2, ராகுல் சஹா் 1 விக்கெட் எடுத்தனா்.

முன்னதாக கில் - பாண்டியா இடையே நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைந்திருந்தது. ஆனால், ரபாடாவின் பௌலிங்கில் அவசரப்பட்டு கில் ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த மில்லரின் தவறால் பாண்டியா ரன் அவுட் செய்யப்பட்டாா். குஜராத் தோல்வியை தொடும் தூரத்திலிருக்கும்போது வந்த ராகுல் தெவாதியா, கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவை இருந்த நிலையில், 2 சிக்ஸா்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT