ஐபிஎல்

வாஷிங்டன் சுந்தர் தொடங்க, நடராஜன் முடிக்க..: 169 ரன்களுக்கு கட்டுப்பட்டது லக்னௌ

4th Apr 2022 09:29 PM

ADVERTISEMENT


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். சிறப்பாகப் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ஓவரிலேயே டி காக் (1) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் எவின் லீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 11 ரன்களுக்கு ரொமாரியோ ஷெபெர்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

பவர் பிளே முடிவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து லக்னௌ தத்தளித்தது. ஆனால், ராகுல் மற்றும் தீபக் ஹூடா சிறப்பாக பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், பின்னர் துரிதமாக விளையாடினர். இதனால், ரன் ரேட் படிப்படியாக உயரத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதையும் படிக்கஐபிஎல் 2022: சிஎஸ்கே அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் தெரியுமா?

ஹூடா 31-வது பந்தில் அரைசதம் அடித்தார். ஆனால், 51 ரன்களுக்கு ரொமாரியோ பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த இணை 87 ரன்கள் சேர்த்தது. 

மறுமுனையில் ராகுல் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். இதன்பிறகு, ராகுல் அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனால், புவனேஷ்வர் குமார் 18-வது ஓவரை சிறப்பாக வீசி பவுண்டரிகள் கொடுக்காமல் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

நடராஜன் 19-வது ஓவரை இன்னும் சிறப்பாக வீசி முதல் பந்தில் ராகுல் (68), 4-வது பந்தில் கிருனால் பாண்டியா (6) விக்கெட்டையும் வீழ்த்தி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

ரொமாரியோ கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி கொடுத்தார். ஆயுஷ் பதோனி (19) கடைசி பந்தில் ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜேசன் ஹோல்டர் 3 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். 

ஹைதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் மற்றும் ரொமாரியோ ஷெபெர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT